மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்துவந்த நிலையில் மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகள் மிக அதிகளவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் எட்டு இடைத்தங்கல் முகாம்கள் நிறுவப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகள் மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கோரளைப்பற்று தெற்கு கிரான் மற்றும் ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரிவுகளில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு பாலையடி தோணா ஸ்ரீ முருகன் வித்தியாலய இடைத்தங்கள் முகாம், பலாச்சோலை இடைத்தங்கள் முகாம், சித்தாண்டி இடைத்தங்கள் முகாம் மற்றும் பறங்கியாமடு இடைத்தங்கள் முகாம்களில் தங்கியுள்ள மக்களை சென்று பார்வையிட்ட மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளிதரன் அவர்கள் பாதிக்கப்பட்ட இம்மக்களது தேவைகள் தொடர்பாக கேட்டறிந்துகொண்டதுடன், அவர்களுக்கான படுக்கை விரிப்புகள் மற்றும் மழை அங்கிகளையும் வழங்கி வைத்ததுடன், குறித்த பிரதேச மக்களின் தேவைப்பாடுகளை அறிந்து அவற்றை உடனடியாக தீர்த்துவைக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இக் களவியஜத்தின் போது கோரளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக முன்னால் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, உதவி பிரதேச செயலாளர் எஸ்.யோகராஜா, ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உத்தியோகத்தர்கள், மாவட்ட ஊடகப்பிரிவு பொறுப்பதிகாரி வ.ஜீவானந்தன் உள்ளிட்ட மேலும் பலர் கலந்துகொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரன உதவிகளை வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇