2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாய பாட முதலாம் மற்றும் இரண்டாம் வினாத்தாள்களுக்கான பரீட்சையை மீண்டும் நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதன்படி குறித்த வினாத்தாள்களுக்கான பரீட்சைகள் அடுத்த மாதம் முதலாம் திகதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் காலை 8.30 முதல் முற்பகல் 11.40 வரையில் இரண்டாம் வினாத்தாளுக்கான பரீட்சையும் பிற்பகல் 1 மணிமுதல் 3 மணிவரையில் முதலாம் வினாத்தாளுக்கான பரீட்சையும் இடம்பெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர் தரப் பரீட்சையின் விவசாய பாடத்தின் முதலாவது வினாத்தாளும் ரத்து செய்யப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற விவசாய பாடத்தின் இரண்டாம் வினாத்தாள், பரீட்சைக்கு முன்னதாக சமூக வலைத்தளங்களில் கசிந்ததாக வெளியான தகவலை அடுத்து அது ரத்து செய்யப்பட்டது.
இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, கடந்த 08ஆம் திகதி இடம்பெற்ற விவசாய பாடத்தின் முதலாம் வினாத்தாளும் பரீட்சைக்கு முன்பாக கசிந்துள்ளமை தெரியவந்தது.
இந் நிலையில் குறித்த இரண்டு வினாத்தாள்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் புதிய வினாத்தாள்களுடன் அந்த பரீட்சை எதிர்வரும் பெப்வரி மாதம் முதலாம் திகதி நடத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇