வெகுசன ஊடக அமைச்சினால் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி செயற்திட்டத்தின் (UNDP) அனுசரனையின் கீழ் கிழக்கு மாகாண பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி செயலமர்வு திருகோணமலையில் உள்ள தனியார் விடுதியில் 08.02.2024 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இப் பயிற்சிப்பட்டறையின் ஆரம்ப நிகழ்விற்கு விருந்தினர்களாக ஊடக அமைச்சின் செயலாளர் வீ.பீ.கே. அனூச பல்பிட்டிய, சுயாதீன ஊடக வலயமைப்பின் தலைவர் சுதர்சன குணவர்த்தன, தகவல் அறியும் உரிமைகள் தொடர்பான ஆணைக்குழுவின் ஆணையாளர் சட்டத்தரணி ஜகத் லியனாரச்சி, ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஊடகப் பகுப்பாய்வாளர் சதுரங்க ஹபு ஆராய்ச்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இலங்கை பத்திரிகை சபையின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான மஹிந்த பத்திரன, வெகுசன ஊடக அமைச்சின் பணிப்பாளர் கே.பி ஜயந்த், வெகுசன ஊடக அமைச்சின் பணிப்பாளர் (அபிவிருத்தி) திருமதி.செவ்வந்தி, கிழக்கு பல்கலைக்கழக மொழிகள் மற்றும் தொடர்பாடல் கற்கைகள் திணைக்கள தலைவர் கலநாதி வீ.ஜே.நவீன்ராஜ், சட்டத்தரணி லியணாராட்சி ஆகியோரின் வழிகாட்டலில் இப் பயிற்சிப்பட்டறை முன்னெடுக்கப்பட்டன.
மேலும், குற்றம் தொடர்பான அறிக்கையிடல், நிகழ்நிலை காப்பு பற்றிய சட்டமூலம், போலித்தகவல்களை பிரசுரித்தல் மற்றும் தொடர்புடைய சட்டங்கள், வெறுப்பு பேச்சு பற்றிய சட்ட ஏற்பாடுகள் மற்றும் ஊடக செயற்பாட்டின் போது கவனம் செலுத்த வேண்டிய தனியுரிமை பற்றிய சட்டப்பார்வை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டப்பட்டன.
இப் பயிற்சிப்பட்டறையில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாரை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களும், அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களும் பங்குபற்றியதோடு , ஊடகவியலாளர்களுக்கு குறித்த பயிற்சிநெறியின் நிறைவில் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇