திறந்த சந்தைத் தொழிற்பாடுகளின் கீழ் துணைநில் வசதிகளை உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் பயன்படுத்துவதன் மீது இலங்கை மத்திய வங்கி 2023 ஜனவரி 16 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் மட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியது.
அதற்கமைய, துணைநில் வைப்பு வசதியைப் பெற்றுக்கொள்வது பஞ்சாங்க மாதம் ஒன்றிற்கு உயர்ந்தபட்சம் ஐந்து (05) தடவைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த அதேவேளை, துணைநில் கடன்வழங்கல் வசதியைப் பெறுவது ஏதேனும் வழங்கப்பட்ட நாளொன்றில் ஒவ்வொரு உரிமம்பெற்ற வர்த்தக வங்கியினதும் நியதி ஒதுக்குத் தேவைப்பாட்டின் 90 சதவீதத்திற்கு வரையறுக்கப்பட்டிருந்தது.
மத்திய வங்கி மூலம் வழங்கப்படும் ஓரிரவு வசதிகள் மீது உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் அளவுக்கதிகமாக தங்கியிருப்பதனைக் குறைக்கும் நோக்குடன் உள்நாட்டுப் பணச் சந்தையை குறிப்பாக, அழைப்புப் பணச் சந்தையை மீளச்செயற்படுத்தி உள்ளக சீராக்க வழிமுறைகளை அறிமுகப்படுத்துவதற்காக உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளை ஊக்குவிப்பதற்கு ஆதரவளித்து இவ்வழிமுறைகள் விதிக்கப்பட்டிருந்தன.
உள்நாட்டுப் பணச் சந்தையினை மீளச்செயற்படுத்துதல் மற்றும் நிதியியல் நிறுவனங்களுக்கிடையில் வைப்புத் திரட்டலுக்கான மிதமஞ்சிய போட்டியினைக் கட்டுப்படுத்துதல் என்பன வாயிலாக இவ்வழிமுறைகள் சாதகமான பெறுபேறுகளை விளைவித்துள்ளன என்பதனை மத்திய வங்கி அவதானிக்கின்றது. நாணயக் கொள்கை நிலைக்கு இசைவாக சந்தை வட்டி வீதக் கட்டமைப்பில் நடுநிலைப்படுத்தலைத் தூண்டுகின்ற அதேவேளை, நிதியியல் நிறுவனங்களினதும் நிதியியல் முறைமையினதும் உறுதிப்பாட்டினைப் பேணுவதிலும் இவ்வழிமுறைகள் ஏதுவாக அமைந்திருந்தன.
உள்நாட்டுப் பணச் சந்தையில் காணப்படுகின்ற அபிவிருத்திகளையும் அதேபோன்று திரவத்தன்மையில் மேம்பாடுகளுடன் இணைந்து சந்தைப் பங்கேற்பாளர்களின் நியதிகளில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளினது நடத்தையினையும் கவனமாக மீளாய்வு செய்ததன் பின்னர் நாணயக் கொள்கைச் சபையானது 2024 பெப்ரவரி 7 அன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் திறந்த சந்தைத் தொழிற்பாடுகளின் கீழ் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுக்கான துணைநில் வசதிகள் மீது விதிக்கப்பட்ட மட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்குத் தீர்மானித்தது.
அதற்கமைய, 2024 பெப்ரவரி 16 அன்று தொடங்குகின்ற ஒதுக்குப் பேணல் காலப்பகுதி தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் துணைநில் கடன்வழங்கல் வசதி மீதான மட்டுப்பாடு அகற்றப்படும் என்பதுடன் துணைநில் வைப்பு வசதி மீதான மட்டுப்பாடு பஞ்சாங்க மாத காலப்பகுதியில் ஐந்து (05) தடவைகளிலிருந்து பத்து (10) தடவைகளாக தளர்த்தப்படவுள்ளன.
துணைநில் வசதிகள் மீதான மட்டுப்பாடுகளின் தளர்த்தலானது மத்திய வங்கியின் ஒட்டுமொத்த நாணயக் கொள்கை பணிப்புரையின் கீழ் எதிர்பார்க்கப்பட்டவாறு சந்தை வட்டி வீதங்களில் கீழ்நோக்கிய சீராக்கங்களைத் துரிதப்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇