தேசிய மட்டத்தில் நடைபெற்ற அகில இலங்கை டெனிஸ் போட்டியில் சம்பியன் அணியாக தெரிவு செய்யப்பட்ட மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின், விளையாட்டு வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (02-10-2023) நடைபெற்றது.
கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வானது, அதன் தலைவர் எந்திரி உமாமகேஸ்வரன் மயூரன் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது குறித்த சம்பியன் அணியாக தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு வீரர்களுக்கும், இவ்வீரர்களுக்கு பயிற்சி வழங்கிய பயிற்றுனர்களுக்கும் பதக்கம் விருதுகள், பணப்பரிசில் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கல்லூரியின் அதிபர் கே.பாஸ்கர், புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை வணக்கத்துக்குரிய ஜோச் யுவராஜ் அடிகளார் மற்றும் பழைய மாணவர் சங்க, பாடசாலை அபிவிருத்திச்சங்க பிரதிநிதிகள் பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் பிரசன்னமாக இருந்தனர்.
இதன் போது தேசிய ரீதியில் நடைபெற்ற அர்ஜன் பெரேரா ஞாபகார்த்த டெனிஸ் சுற்றுப்போட்டியில் மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 16 வயதுக்குட்பட்ட ரி.ஜிதேஸ், அக்ஷயன், தனுஸ்கர் ஆகியோரும் இலங்கை பாடசாலை டெனிஸ் சங்கத்தினால் நடாத்தப்பட்ட 17 வயதுக்குட்பட்ட தேசிய டெனிஸ் போட்டியில் சம்பியனாக தெரிவுசெய்யப்பட்ட வீரர்களும் இதன் போது கௌரவிக்கப்பட்டனர்.
இலங்கையின் பிரபல பாடசாலைகளுடன் மோதி இந்த வெற்றி வாய்ப்பினை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவர்கள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(தகவல், படங்கள் – Jeyathasan Balasingam)