மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் முன்பள்ளிகளுக்கான சுகாதார மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் (20.02.2024) அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் குறித்த நிகழ்ச்சித் திட்டத்தின் இணைப்பாளரும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைப் பிரிவில் செயற்படும் சுகாதார மேம்பாட்டுப் பிரிவின் தலைவருமான வைத்தியர் கே. மாதவன் திட்டத்தில் தமது பங்களிப்புக்கள் தொடர்பான கருத்துக்களை முன்வைத்தார்.
இதன்போது பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் சுகாதாரக் கல்வி உத்தியோகத்தர் த. தஜீகரன் சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்துடன் இணைந்து சுகாதார அமைச்சின் ஆதரவுடன் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் நடைமுறைப்படுத்தும் குறித்த “முன்பள்ளிகளுக்கான சுகாதார மற்றும் போசாக்கு மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தின் செயற்பாடுகள் குறித்தும் தெளிவுபடுத்தினார்.
குறித்த நிகழ்ச்சித்திட்டத்தில் ஐந்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் போசாக்கு குறைபாட்டை நிவர்த்திப்பதற்காக வருடாந்தம் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் 5 பதிவு செய்யப்பட்ட பின் தங்கிய முன்பள்ளிகள் வீதம் தெரிவு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதற்காக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஒத்துழைப்புடன் இம்முன்பள்ளி சிறார்களின் சுகாதாரத்தை முன்னேற்றுவதற்கான செயற்பாட்டு வழிகாட்டல்கள் மற்றும் ஆலோசனைகள் என்பன, இக்கலந்துரையாடலில் பங்கேற்ற மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பணியாற்றும் முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇