மட்டக்களப்பு மாந்தீவில் காணப்படும் தொழுநோய் வைத்தியசாலையினை சிறைச்சாலையாக மாற்றும் நடவடிக்கை தொடர்பாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ (23.02.2024) அன்று கள விஜயமொன்றினை மேற்கொண்டு பார்வையிட்டுள்ளார்.
சிறைச்சாலைகளில் காணப்படும் இட நெருக்கடிக்கு தீர்வாக சுகாதார அமைச்சிற்கு சொந்தமான இரண்டு கட்டிடங்களை சிறைச்சாலைகளாக மாற்றுவதற்கு நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சும் சுகாதார அமைச்சும் இணைந்து தீர்மானித்துள்ளதனடிப்படையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கீழ் இயங்கும் மாந்தீவு வைத்தியசாலைக்கு குறித்த கள விஜயத்தினை அமைச்சர் மேற்கொண்டுள்ளார்.
தற்போது 32 ஆயிரத்திற்கும் அதிகமான கைதிகள் சிறைச்சாலைகளில் உள்ளமையினால் கைதிகளுக்கு போதுமான இட வசதி பற்றாக்குறையினை நிவர்த்திக்கும் நோக்கிலேயே ஹெந்தலையிலுள்ள தொழுநோயாளர் வைத்தியசாலையின் சில கட்டிடங்களும், மட்டக்களப்பு மாந்தீவில் அமைந்துள்ள பழைய வைத்தியசாலை கட்டிடமும் இதற்காக பயன்படுத்தப்படவுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த கள விஜயத்தின் போது மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திர காந்தன், நீதி இராஜாங்க அமைச்சர் அநுராதா ஜெயரத்தின, நீதியமைச்சின் செயலாளர் எம்.என்.ரணசிங்க, சுதாதார அமைச்சின் உயரதிகாரிகள், மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் ந.பிரபாகரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.