முதலாவது ‘இலங்கை புடவை மற்றும் தைக்கப்பட்ட ஆடை வீதிக்கண்காட்சி’ லண்டனில் நடைபெறவுள்ளது.
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை, இலங்கை தைக்கப்பட்ட ஆடை விற்பனையாளர் சங்கம் மற்றும் பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம், இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த கண்காட்சி எதிர்வரும் ஜூன் மாதம் 2 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதிவரை நடை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சி மூலம் சிறிய அளவிலான ஆடை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களும் நன்மையடைவர் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச ரீதியிலான தைக்கப்பட்ட ஆடை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பெரிய நிறுவனங்களுடன் இணைந்து, சிறிய அளவிலான இலங்கை உற்பத்தியாளர்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்த முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் சர்வதேச நிறுவனங்கள் 50 தமது காட்சிசாலைகளை ஸ்தாபிக்கவுள்ளதுடன், குறிப்பிட்ட வர்த்தக நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் பங்குகொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும் அமெரிக்காவுக்கான இலங்கை தூதரகம் என்பன இணைந்து தைக்கப்பட்ட ஆடை உற்பத்தியுடன் தொடர்புடைய கண்காட்சி ஒன்றினை அமெரிக்காவில் ஏற்பாடு செய்திருந்தது.
இந்த கண்காட்சியில் சர்வதேச மற்றும் உள்நாட்டு ரீதியில் பிரபலமான 35 இற்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇