தேசிய ரீதியில் தொற்றாநோய்களை தடுக்கும் நோக்கத்துடன் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ஆரோக்கிய மாதத்தினை முன்னிட்டு 07.04.2024 அன்று மட்டக்களப்பில் நடைபவனி ஒன்று இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எந்திரி என்.சிவலிங்கம் தலைமையில் இடம்பெற்ற குறித்த நடைபவனியானது மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனை வளாகத்தில் இடம்பெற்ற உடற்பயிற்சியினை தொடர்ந்து அங்கிருந்து ஆரம்பிக்கப்பட்டு மட்டக்களப்பு மணிகூட்டு கோபுரத்தை சென்றடைந்து அங்கிருந்து காந்தி பூங்கா வழியாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள கோட்டை பூங்கா வளாகத்தை சென்றடைந்தது.
குறித்த நடைபவனி நிறைவடைந்ததைத் தொடர்ந்து கோட்டை பூங்கா வளாகத்தில் பிராந்திய சுகாதார பணிமனையின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்டு மாநகரசபையினால் பராமரிக்கப்படவிருக்கும் திறந்த வெளி உடற்பயிற்சி நிலையம் அதிதிகளினால் நாடா வெட்டி பொதுமக்கள் பாவனைக்காக உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சும் மட்டக்களப்பு மாவட்ட செயலகம், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த குறித்த நடைபவனிக்கு பிரதம அதிதிகளாக வடமாகாண சுகாதார அமைச்சின் (பதில்) பணிப்பாளரும், யாழ்ப்பாண வைத்தியசாலையில் பணிப்பாளருமாகிய வைத்திய கலாநிதி ரீ.சத்தியமூர்த்தி, மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், முன்னால் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளரும் தற்போதைய வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளருமான வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், ஏனைய திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மாவட்ட மக்களின் உடல், உள நல மேம்பாட்டை கருத்திற் கொண்டு முன்னால் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளரும் தற்போதைய வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளருமான வைத்திய கலாநிதி ஜீ.சுகுணனின் எண்ணக்கருவில் உதித்த திட்டத்திற்கு அமைவாகவே திறந்த வெளி உடற்பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇