கோட்டைமுனை விளையாட்டு கழகம் மற்றும் கோட்டைமுனை விளையாட்டு கிராமம் என்பன மட்டக்களப்பு பாடசாலை கிரிக்கெட் அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து நடாத்தும் பாடசாலைகளுக்கு இடையிலான கிறிக்கெட் பயிற்சி போட்டி எதிர்வரும் 15.03.2024 திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அது தொடர்பிலான ஊடக மாநாடு கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தில் இடம்பெற்றது.
கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் தலைவர் பே.சடாற்சரராஜா தலைமையில் இடம் பெற்ற ஊடக மாநாட்டில் கோட்டைமுனை விளையாட்டு கிராமம் மற்றும் கழகத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் எஸ்.ரஞ்சன் மற்றும் கோட்டமுனை விளையாட்டு கழகம், கோட்டமுனை விளையாட்டு கிராமம் EPP திட்டம் ஆகியவற்றின் பணிபபாளர் (கிரிக்கெட்) மளிங்க சுரப்புலிகே, கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் பொது செயலாளரும், EPP யின் தலைமை நிருவாகியுமான வீ.வசந்தமோகன், கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் செயலாளரும் EPP யின் பிரதம பயிற்றுவிப்பாளருமான தி.மதிராஜ், கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் பொருளாளரும் EPP யின் பயிற்றுவிப்பாளருமான ஜீ.கிருஸ்ணராஜாஜீ உள்ளிட்ட பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு இடையில் கிரிக்கெட் தொடர்பிலான ஆர்வத்தை மேம்படுத்தும் நோக்கில் மூன்று வருடங்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ள கிரிக்கெட் பயிற்சி தொடர்பான செயற்றிட்டத்திற்குள் முதற் கட்டமாக மட்டக்களப்பு கல்வி வலையத்திற்கு உட்பட்ட புனித மிக்கேல் கல்லூரி, இந்து கல்லூரி, கருவேப்பங்கேணி விபுலானந்தா கல்லூரி, மெதடிஸ்த மத்திய கல்லூரி மற்றும் சிவானந்தா தேசிய பாடசாலை உள்ளிட்ட பாடசாலைகள் உள்வாங்கப்பட்டுள்ளன.
கல்வித் திணைக்களத்தின் அனுமதியுடன் ஆரம்பிக்கப்படவுள்ள குறித்த கிறிக்கெட் பயிற்சி போட்டியானது முற்று முழுவதுமாக மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது.
இவ் ஊடக மாநாட்டில் கோட்டைமுனை விளையாட்டு கிராமம் மற்றும் கோட்டைமுனை விளையாட்டு கழகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த ஆரம்ப நிகழ்விற்கு அனைத்து விளையாட்டுப் பிரியர்களையும் பங்கேற்று சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றனர் ஏற்பாட்டுக்குழுவினர்.
அத்தோடு எதிர்வரும் 01.04.2024 ஆந் திகதி முதல் 07.04.2024 திகதி வரை கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் அனுசரனையுடன் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தினால் 19 வயதிற்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான அணிகளுக்கு இடையில் கிரிக்கெட் போட்டி தொடர் ஒன்றும் இடம் பெறவுள்ளது.
இப்போட்டித் தொடரில் கண்டியின் பிரபல பாடசாலைகளில் ஒன்றான திருத்துவக் கல்லூரி, கொழும்பின் பிரபல பாடசாலைகளில் ஒன்றான தேஸ்டன் கல்லூரி, காலியின் பிரபல பாடசாலைகளான றிச்மன்ட் கல்லூரி, மகிந்த கல்லூரி ஆகியவற்றுடன் வடகிழக்கு தெரிவு அணியினரும் பங்குபற்றவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇