உன்னிச்சை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையினை தரம் உயர்த்தலும் கல்வி பொது தராதர உயர்தர பிரிவு ஆரம்பித்தல் நிகழ்வும் பாடசாலையின் அதிபர் தர்மலிங்கம் விநாயகமூர்த்தி தலைமையில் 28.03.2024 அன்று இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு வர்த்தக இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவருமான சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பாடசாலையினை தர முயர்த்தும் உத்தியோக பூர்வ ஆவணத்தினை கையளித்ததுடன் உயர் தர மாணவர்களின் வகுப்பறையினை நாடா வெட்டி உத்தியோக பூர்வமாக திறந்துவைத்ததுடன், அவர்களுக்கான கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளையும் ஆரம்பித்து வைத்தார்.
நிகழ்வில் கௌரவ அதிதிகளாக மண்முனை மேற்கு வலய கல்வி அலுவலகத்தின் நிருவாக பிரதி கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார், திட்டமிடல் பிரதி கல்விப் பணிப்பாளர் வை.சீ.சஜீவன், வலயத்தின் ஆங்கில பாட வளவாளர் ஜி.யூட்குமார் மற்றும் அண்மித்த பாடசாலைகளின் அதிபர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உன்னிச்சை பகுதியை அண்மித்துள்ள எட்டு கிராமங்களை சேர்ந்த சுமார் எட்டு கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் சுமார் 15 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கரடியனாறு பாடசாலைக்கு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தமது உயர் தர கல்வியை கற்பதற்காக செல்ல வேண்டியிருந்ததன் காரணத்தினால், கிழக்கு மாகாண ஆளுநரிற்கு இராஜாங்க அமைச்சரின் சிபாரிசுக்கு அமைவாக குறித்த பாடசாலை தரமுயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலையின் பிரதி அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇