ஒவ்வொரு வருடமும் நுவரெலியாவில் ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படும் வசந்த கால நிகழ்வுகள் இந்த ஆண்டு இன்று (01.04.2024) காலை நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் நுவரெலியா மத்திய சந்தைக்கு முன்பாக ஆரம்பித்துவைக்கப்பட்டன.
நுவரெலியா நகரில் உள்ள பாடசாலை மாணவர்களின் மேலைத்தேய வாத்திய இசையுடன் வசந்த கால நிகழ்வுகள் ஆரம்பமாகின.
நுவரெலியா மாநகர சபை ஏற்பாட்டில் நுவரெலியா மாநகர சபை விசேட ஆணையாளர் சுஜீவ போதிமான தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இம்மாதம் முழுவதும் பல்வேறு பாரம்பரிய நிகழ்வுகள், போட்டிகள் என்பன ஏற்பாடாகியுள்ளன.
இன்றைய நிகழ்வில் மத்திய மாகாண ஆளுநர் லலித் யு. கமகே சிறப்பு முதன்மை அதிதியாக கலந்துகொண்டதோடு, நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலகொட, பிரதேச செயலாளர், உதவி செயலாளர், பொலிஸ் அத்தியட்சகர்கள், முன்னாள் மாநகர சபை முதல்வர் மஹிந்த தொடபேகம மற்றும் சந்தணலால் கருணாரத்ன, நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், இராணுவ அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள், விமானப்படை அதிகாரிகள், சுகாதார மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இந்த வசந்த கால கொண்டாட்ட நிகழ்வுகள் இம்மாதம் 30ஆம் திகதி வரை நடைபெறும். ஆரம்ப நிகழ்வை தொடர்ந்து வரும் நாட்களில் மலர் கண்காட்சி, படகோட்டம், கார் பந்தய ஓட்டப் போட்டி, குதிரைப்பந்தயம், கிரிக்கெட் சுற்றுப் போட்டி, உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி, கிறகரி வாவியில் நீர் விளையாட்டு, சேற்றில் மோட்டார் ஓட்டம், மோட்டார் சைக்கிள் தடைதாண்டல் போட்டி மற்றும் இசை நிகழ்ச்சிகள் என பல வகையான களியாட்ட அம்சங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇