கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி புளோரன்ஸ் பாரதி கென்னடி தலைமையில் கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் 6வது சர்வதேச ஆய்வுக் கருத்தரங்கு மட்டக்களப்பு கல்லடியில் நடைபெற்றது.
இவ் ஆய்வு மாநாட்டிற்கு பிரதம விருந்தினராக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினரும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் வசந்தி அரசரெட்ணமும், சிறப்பு விருந்தினராக கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகப் பீடாதிபதி பேராசிரியர் கோவித பானு திஸாநாயக்கவும், தலைமை பேச்சாளராக கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழக இயக்குநர் பேராசிரியர் ரோஹான் நேத்சிங்கவும், கௌரவ விருந்தினராக கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம் மற்றும் போரசிரியர்கள், கலாநிதிகள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
சமகால சூழலில் சமூகப் பொருளாதார மற்றும் கலாசார வல்லுநர்களின் கலைகள் எனும் தொனிப்பொருளில் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைள் நிறுவகத்தின் நுண்கலை கற்கைகளிலே உயர் கைத்தொழில் பொருளாதார வளர்ச்சியில் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகின்றது என்ற தலைப்பில் இந்த ஆய்வு மாநாடு நடைபெற்றது.
மாணவர்களின் இசை ஆற்றுகைகள், நடன நிகழ்வுகளுடன் நிகழ்வு நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆய்வாளர்களின் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிப்பும், ஆய்வு மன்ற கருத்துரைகளும் நடைபெற்றன. மொத்தமாக 58 ஆய்வுக் கட்டுரைகள் இந்த ஆய்வு மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டதுடன் 11 ஆய்வு அரங்குகளில் இந்த ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டதாக ஆய்வு மாநாட்டின் செயலாளர் கலாநிதி நிலங்கா லியனகே தெரிவித்தார்.