இந்நாட்டு சர்வதேச இறையாண்மை பத்திரங்களை மறுசீரமைப்பது தொடர்பான கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி முடிவடைந்ததாக அரசாங்கம் 16.04.2024 அன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இரு தரப்பினரும் இணக்கப்பாட்டுக்கு வரக்கூடிய பொதுவான நிலைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு அடுத்த சில வாரங்களில் செயற்படுவதே இலங்கையின் விருப்பம் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
கடன் மறுசீரமைப்பு தொடர்பாக சர்வதேச பத்திரப்பதிவுதாரர்களுடனான கலந்துரையாடலின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிப்புரையின் தலைவருமான சாகல ரத்நாயக்க, கடந்த மார்ச் மாத இறுதியில் லண்டனில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது 4 விடயங்கள் தொடர்பில் சிக்கல் நிலை ஏற்பட்டதாக நேற்று தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இரண்டு விடயங்களில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாகவும், கலந்துரையாடல் தொடரும் எனவும் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கையினால் தீர்க்கப்படவுள்ள சர்வதேச இறையாண்மை பத்திரங்கள் தொடர்பில் பத்திரப்பதிவுதாரர்களின் பிரதிநிதிகள் குழுவுடன் கடந்த மூன்று வாரங்களாக நடத்தப்பட்ட ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதாக நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
அக் கலந்துரையாடல்களில் மறுசீரமைப்பு விதிமுறைகள் குறித்து இறுதி உடன்பாடு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், இலங்கை கடன் திட்டத்தின் இரண்டாவது மதிப்பீட்டை பரிசீலிப்பதற்கு முன்னர் சர்வதேச இறையாண்மை பத்திரம் வைத்திருப்பவர்களுடன் பொதுவான உடன்படிக்கையை எட்ட முடியும் என சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
சர்வதேச இறையாண்மைப் பத்திரதாரர்களுக்கான இலங்கையின் மொத்தக் கடன் 12 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇