நுவரெலியாவின் எழில் மிக்க மலைகளை அண்மித்துக் காணப்படும் சுற்றுலாத் தொழில்துறையின் மறுமலர்ச்சி தொடர்பில் ஆராய 16.04.2024 அன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நுவரெலியா – உடபுசலாவை – கோர்ட் லொட்ஜ் தோட்டத்திற்கு நேரடி விஜயம் மேற்கொண்டிருந்தார்.
Peko Trail பாதையினூடாக ஜனாதிபதி நடைபயணமாக இப்பகுதிகளை மேற்பார்வை செய்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
“Peko Trail” என்பது இலங்கையின் மத்திய மலைப்பகுதிகளூடாகச் செல்லும் 300 கிலோ மீற்றர் மலையேறும் பாதையாகும். ஆசியாவின் மிக ரகசியமான பாதைகளில் இதுவும் ஒன்றாகும்.
Peko Trail என்று அறியப்படும் இப் பாதையானது கண்டியில் ஆரம்பித்து ஹட்டன் ஊடாக ஹோட்டன் தென்ன தேசிய வனப் பூங்கா வரையில் செல்கிறது. அதன் பின்னர் ஹப்புத்தலை – எல்ல ஊடாக பயணித்து அழகிய நுவரெலியா நகரத்தில் பயணத்தை நிறைவு செய்யலாம். இந்த பாதை பிரித்தானிய காலணித்துவக் காலத்தில் பெருந்தோட்டங்களிலிருந்து தொழிற்சாலைகளுக்குச் செல்ல பயன்படுத்தப்பட்டுள்ளது.
Peko Trail பாதையினூடாக 3.2 கி.மீ தூரத்திற்கு நடைப் பயணமாக சென்ற ஜனாதிபதி கோர்ட் லொட்ஜ் தோட்ட மக்களுடனும் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.
அப்பகுதி மக்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு சிறப்பு வரவேற்பளித்ததோடு, ஜனாதிபதி அங்குள்ள மக்களுக்கு தமிழ், சிங்களப் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
பிரவுன்ஸ் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் கோர்ட் லொட்ஜ் தோட்டம் 264 ஹெக்டயார் பரப்பை கொண்டுள்ளதோடு. அங்கு 349 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
இந்த விஜயத்தின் போது தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் கல்வி, சுகாதார பிரச்சினைகள் குறித்து அவதானம் செலுத்தியிருந்த ஜனாதிபதி, உயர்தரத்தின் பின்னரான அப்பகுதி பிள்ளைகளின் எதிர்காலம் குறித்தும் ஆராய்ந்தார்.
அதனையடுத்து தோட்ட மக்களின் வீட்டுப் பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தினார்.
கோர்ட் லொட்ஜ் தோட்டத்தில் “Light Bright” என்ற நாமத்திலான தேயிலை வகை உற்பத்திச் செய்யப்படுவதோடு, அங்கு சுற்றுலா விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி தொழிற்சாலை ஊழியர்களுடனும் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.
இப்பகுதியின் ஊடாக மலையேறும் சுற்றுலாப் பயணிகளுக்கு சுவையான தேநீர் கோப்பை ஒன்றை அருந்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது குறித்தும் கவனம் செலுத்தினார்.
பின்னர் Peko Trail பாதையினூடாக சுற்றுலா தொழில்துறையை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் ஜனாதிபதி கவனம் செலுத்தினார்.
Peko Trail வேலைத்திட்டத்தின் ஸ்தாபகரான இலங்கையின் மலையகப் பகுதிகளில் பல வருடங்களாக சுற்றுலா பயணங்களை மேற்கொண்டிருக்கும் சுற்றுலா ஆலோசகர் மிகோல் குணாட் உலகின் மிகச் சிறந்த மலையேறுதல் களமாக இலங்கையை உலக வரைபடத்தில் இணைக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.
Peko Trail வழிப்பாதையின் ஊடாக சுற்றுலா பயணத்தை மேற்கொள்ளும் பிரயாணிகளுக்கு இந்நாட்டின் வரலாறு, கலாச்சாரம், உள்நாட்டு உணவு வகைகள் உள்ளிட்ட பல்வேறு அனுபவங்களை பெற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். Peko Trail சுற்றுலா வழிப்பாதை 22 கட்டங்களை கொண்டுள்ளதோடு, ஒரு நாள் அல்லது பல நாட்களாக பயணிக்கவும் முடியும்.
இலங்கையின் தேசிய சுற்றுலா வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக முன்னெடுக்கப்படும் Peko Trail திட்டத்திற்கு ஐரோப்பியச் சங்கம் (EU) மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகளின் முகவர் நிறுவனம் (USAID) ஆகியவற்றின் ஒத்துழைப்பும் கிடைத்துள்ளதோடு, நிலையான சுற்றாடல் அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களும் அதனில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அருமையான சுற்றுலா அனுபவத்தை தேடிச் செல்லல் உள்ளிட்ட புதிய சுற்றுலாச் செயற்பாடுகளை இலங்கைக்குள் வலுப்படுத்தல், கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் உள்ளிட்ட நோக்கங்களுக்காக இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
Peko Trail வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க உதவியமைக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நன்றி தெரிவித்த மிகேல் குணாட், சுற்றுலாத் துறையில் புதிய மாற்றத்துடன் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த ஜனாதிபதி முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கும் பாராட்டுத் தெரிவித்தார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇