நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு விவசாயத்திற்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கடந்த காலங்களில் நாட்டின் பிரதான ஏற்றுமதிப் பயிராக இருந்த கறுவாச் செய்கையை பிரபலப்படுத்தும் வேலைத்திட்டம் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்துடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் 28.04.2024 அன்று இடம்பெற்ற டில்மா சினமன் வர்த்தக நாமத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
“சிலோன் டீ” என்ற பெயரை சர்வதேச சந்தைக்கு கொண்டு சென்ற டில்மா வர்த்தக நாமம், தனது நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் உள்நாட்டு ஏற்றுமதியை மேலும் விரிவுபடுத்தி இலங்கையின் கறுவா தொழிற்துறையில் பிரவேசித்து டில்மா வர்த்தக நாமத்தின் கீழ் உயர்தர கறுவா உற்பத்திகளை சர்வதேச சந்தைக்கு அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆறாம் பராக்கிரமபாகு மன்னன் கறுவாத் தொழில் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடியவன் என்பதாலேயே மலையக இராச்சியத்தைக் கைப்பற்றியதாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த இராச்சியத்தின் அதிசயம் செலலிஹினியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போர்த்துக்கேயர்களுடன் போரிட்ட சீதாவக்க ராஜசிங்க மன்னன், போர்த்துக்கேயரை மலையகக் கோட்டைக்குள் மட்டுப்படுத்தினான்.
மேலும், மலையக இராச்சியத்தை பராமரிப்பதற்கான பணம் கறுவா தொழிலில் இருந்து கிடைத்தது. ஆனால் கறுவாவுக்குப் பதிலாக கோபி, டீ என்பன வந்ததால், கறுவாவின் விலை வீழ்ச்சியடைந்ததோடு மொத்த நிலையும் மாறியது. ஆனால் இலங்கை கறுவா உலகிலேயே சிறந்த கறுவா என்ற அங்கீகாரம் இன்னும் உள்ளது.
டில்மா நிறுவனம் “சிலோன் டீ” என்ற பெயரை புத்துயிர் பெறச்செய்தது போல் “சிலோன் சினமன்” என்ற பெயரையும் புத்துயிர் பெறச்செய்துள்ளது. அதற்கு நான் நன்றி கூறுவதுடன், இந்த நாட்டின் பொருளாதாரத்தில் இது ஒரு புதிய பயணத்தின் ஆரம்பம் என்றும் நான் நம்புகிறேன்.
நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதில் விவசாயத்திற்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்பதைக் கூற வேண்டும்.
விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் மூலம் நாட்டை மீண்டும் விவசாய பொருளாதாரத்திற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம் அதற்கு தேவையான புதிய சட்டங்களை கொண்டு வர எதிர்பார்க்கிறோம்.
இத்திட்டத்தை அரசதுறை மற்றும் தனியார் துறையினர் ஆதரிக்க வேண்டும். டில்மா நிறுவனத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் உங்களுக்குத் தேவையான எந்த ஆதரவையும் வழங்க நாம் தயாராக உள்ளோம் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். டில்மா நிறுவனத்திற்கும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இந் நிகழ்வில் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க, சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் வெளிநாட்டு உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள், டில்மா குழுமத்தின் தலைவர் டில்ஹான் பெர்னாண்டோ மற்றும் குடும்பத்தினர் உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇