ஜூன் முதலாம் திகதி முதல் காலி கோட்டையில் ஒரு வழிப்பாதை சட்டத்தை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (15) காலி கோட்டைக்கு விஜயம் செய்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கேட்டறிந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
காலிக்கோட்டைக்குள் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பிரவேசிப்பதாகவும், முறையான போக்குவரத்துத் திட்டம் இல்லாத காரணத்தினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலி ஒரு முக்கியமான சுற்றுலா பாரம்பரியம் எனவும் அதனை பாதுகாப்பது மாகாண ஆளுநர் என்ற ரீதியில் தனது பொறுப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலி கோட்டையை சுத்தம் செய்வதற்கு காலையிலும் மாலையிலும் இரண்டு விசேட குழுக்கள் ஈடுபடுத்தப்படும் எனவும் ஆளுநர் மேலும் குறிப்பிட்டார்.
சுற்றுலாப் பயணிகளுக்கும் மக்களுக்கும் சாதகமான வகையில் கோட்டையின் செயற்பாடுகளை பராமரிக்கும் வகையில், வர்த்தக சமூகம் மற்றும் உள்ளூர்வாசிகளின் ஆதரவுடன் பொலிசார் புதிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதன்படி, எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் அனைத்து வாகனங்களும் பழைய தடுப்பு வாயில்கள் ஊடாக காலி நகருக்குள் நுழைந்து புதிய தடுப்பு வாயில்கள் ஊடாக வெளியேறும் என பொலிஸார் தெரிவித்தனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇