மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்ட இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் (Andrew Patrick) மற்றும் அவரது அதிகாரிகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்ததுடன் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையிலான குழுவினருடனான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பல்வேறு விடயங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன், மாவட்டத்தில் உள்ள வளங்கள் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அறிந்துகொள்ளுவதற்காக மாவட்ட செயலக பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.ஜதீஸ்குமாரினால் முன்னளிக்கை செய்யப்பட்டது.
மாவட்டத்தின் பிரதான உற்பத்தித் துறைகளான மீன்பிடி, விவசாயம், கால்நடை வளர்ப்பு, சுற்றுலா உள்ளிட்ட அனைத்து துறைசார் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.
அத்துடன் பிரித்தானிய உயர்ஸ்தானிகரை கௌரவிக்கும் வகையில் மாவட்ட அரசாங்க அதிபரரினால் நினைவுப் பரிசில்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கான தொழில்களை வழங்குவதற்கு தேவையான உதவிகள் வழங்க முன்வர வேண்டும் என அரசாங்க அதிபர் உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை முன்வைத்தார்.
ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த உயர்ஸ்தானிகர் முதல் முறையாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்திருப்பதாகவும் மேலும் ஐக்கிய நாட்டு அபிவிருத்தி திட்டத்தினுடாக நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகளைப் பார்வையிட்டதாகவும் அரசாங்க அதிபருடன் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடல் மேற்கொண்டதாக இதன் போது கருத்து தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வீ.நவநீதன், மாவட்ட செயலக உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇