”அ” கலையகத்தின் தயாரிப்பில் மட்டக்களப்பில் மிகவும் பிரபலமான இயக்குநராக அறியப்படும் திரு. கிரேசன் பிரசாத் இன் இயக்கத்தில் உருவாகிவரும் முழுநீளத் திரைப்படமான ”ஒமேகா” (OMEGA) திரைப்படத்தின் பெயர் அறிமுக நிகழ்வும், போஸ்ட்டர் வெளியீடும் இன்று (10 – 09 – 2022) மட்டக்களப்பில் இடம்பெற்றன.
இதுவரை காலமும் குறும்படங்களை மட்டுமே தயாரித்து வந்த ”அ” கலையகத்தினால் முதன்முதலாக இந்த முழுநீளத் திரைப்படம் தயாரிக்கப்படுவதுடன் அதற்கு ”ஒமேகா” எனப் பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பில் புகழ்பெற்ற நடிகர் – நடிகைகளான அகல்யா டேவிட், ஜானு முரளிதரன், தில்சி மகேந்திரன், காண்டீபன் சிவா, அஜித் சுந்தர், அரவின் ரமணன் உட்பட பலரின் நடிப்பில் திரையரங்குகளில் வெளியிடப்படுவதற்காக இப்படம் தயாரிக்கப்படுகிறது.
இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக சுவாமி விபுலாநந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் திருமதி. பாரதி கென்னடி அழைக்கப்பட்டிருந்தார்.
விழாவில் கலந்துகொண்ட கலைஞர்கள், சினிமா ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களுடன் அவர்களுக்குப் பிடித்த இயக்குநர்கள், படங்கள் போன்ற தலைப்புகளில் கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் வெளியிடப்பட்ட போஸ்ட்டர் – அதன் மூலம் வெளிப்படுத்தப்படும் கருத்தின் அடிப்படையில் இத்திரைப்படம் எதனைப்பற்றி பேசுவதாக இருக்கலாம் என ஊகித்து பலரும் தமது கருத்துக்களைப் பரிமாறினர்.