நாகபட்டினம் – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை இன்று (16.08.2024) முதல் மீண்டும் ஆரம்பமாகின்றது.
நாகபட்டினத்திலிருந்து இன்று முற்பகல் 10 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கும் சிவகங்கை கப்பல் பிற்பகல் 2 மணிக்கு காங்கேசன்துறையை வந்தடையும்.
பின்னர், நாளை மறுதினம் காங்கேசன்துறையிலிருந்து முற்பகல் 10 மணிக்கு புறப்படும் அக் கப்பல் பிற்பகல் 2 மணிக்கு நாகபட்டினத்தை சென்றடையும்.
இதனைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை முதல் அனைத்து நாட்களிலும் நாகபட்டினத்திலிருந்து காலை 8 மணிக்கு புறப்படும் கப்பல் நண்பகல் 12 மணிக்கு காங்கேசன்துறையை வந்தடையும். பின்னர் இங்கிருந்து 2 மணிக்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகபட்டினத்தை சென்றடையும்.
சிவகங்கை கப்பலில் சாதாரண வகுப்பு இருக்கை ஒன்றுக்கு இலங்கை மதிப்பில் 17 ஆயிரத்து 800 ரூபாவும், சிறப்பு வகுப்பு இருக்கை ஒன்றுக்கு 26 ஆயிரத்து 700 ரூபாவும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
மேலும் பயணி ஒருவர் 60 கிலோ பொதிகளை தம்முடன் எடுத்துச் செல்ல முடியும். அத்துடன், பயணி தனது கைப்பையில் 5 கிலோ பொருட்களை கொண்டு செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை கப்பல் கடந்த 10ஆம் திகதி பரீட்சார்த்த ஓட்டமாக காங்கேசன்துறைக்கு வந்து நாகபட்டினத்துக்கு திரும்பியிருந்தது.
முன்னதாக, இந்த இரு துறைமுகங்களிடையே 1982ஆம் ஆண்டுவரை படகு சேவை நடைபெற்று வந்தது.
உள்நாட்டு போரைத் தொடர்ந்து இந்த சேவை நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், 41 வருடங்களின் பின்னனர் – கடந்த ஆண்டு ஒக்ரோபர் 14ஆம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி மெய்நிகர் வழியே கப்பல் சேவையை ஆரம்பித்து வைத்தார்.
எனினும், தொழில்நுட்ப கோளாறு மற்றும் கடல்சீற்றம் காரணமாக இக் கப்பல் சேவை தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.