வடக்கு மாகாண கல்வித் துறைக்குள் பட்டதாரிகளை உள்வாங்கும் நோக்குடன் 356 பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் 25/05/2024 அன்று ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவினால் வழங்கி வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இந் நிகழ்வு நடைபெற்றது.
இந் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடமாகாண பிரதம செயலாளர், வடமாகாண அவைத்தலைவர், பட்டதாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,
“ ஆசிரியர் பதவிக்கான போட்டிபரீட்சையில் 3000 பேர் தோற்றிய போதிலும், அவர்களால் பெற்றுக்கொள்ளப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட நேர்முக தேர்வில் தெரிவுசெய்யப்பட்ட 356 பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம் இன்று வழங்கி வைக்கப்படுகிறது. எனினும் ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய இன்னும் இரண்டு வாரங்களில் மீண்டும் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு எஞ்சிய வெற்றிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். உயர்தர வகுப்புகளுக்கான ஆசிரியர் பற்றாகுறை நிலவுகின்றது. யாழ் மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். மாணவர்களின் உளநலம் தொடர்பில் சிந்தித்து, புதிய தொழில்நுட்ப முறைகளை கையாண்டு சிறந்த சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும். அரச தொழிலை மாத்திரம் எதிர்பார்க்காத புதிய சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு உங்களிடம் காணப்படுகின்றது.” என தெரிவித்தார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇