கடந்த 26-09-2023 அன்று பிரமாண்டமான முறையில் நடந்த “பாடுமீன்களின் சமர்” என்று வர்ணிக்கப்படும் 50 ஓவர்கள் கொண்ட கடினப்பந்து கிரிக்கட் போட்டியின் போது சிலரின் பொறுப்பற்ற செயல்களால் சிவாநந்தா தேசியப்பாடசாலைக்குச் சொந்தமான மைதானம் சேதமடைந்தமை தொடர்பாக பலரும் தமது கவலையை வெளியிட்டிருந்தனர்.
குறித்த போட்டியில் பங்குபற்றிய மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மற்றும் புனித மிக்கேல் கல்லூரி பழையமாணவர் சங்கங்கள் மிகவும் பொறுப்புணர்வுடன் இவ்விடயத்தைக் கையாண்டதுடன் உடனடியாக எழுத்து மூலமாக தமது வருத்தத்தைப் பதிவு செய்து மன்னிப்பையும் கோரியிருந்தனர்.
அத்துடன் 2023 ஆம் வருடத்திற்கான இப்போட்டியை ஏற்பாடு செய்தவர்கள் எனும் கூடுதல் பொறுப்பை ஏற்று புனித மிக்கேல் கல்லூரி நிர்வாகம் குறித்த மைதானத்தை செப்பனிடும் பணியை இன்று (28-09-2023) ஆரம்பித்திருக்கிறது.
தவறுகள் ஏற்படுவது சகஜம். ஆனாலும் அது ஒரு சிலரின் பொறுப்பற்ற செயல் எனக் கடந்து செல்லாமல் தவறை ஏற்றுக்கொண்டு மன்னிப்பும் கோரியமை ஒரு முன்மாதிரியான செயல் எனவும் குறித்த இரு பாடசாலைகளின் முதிர்ச்சியை வெளிக்காட்டுவதாகவும் பலரும் கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
ஒரு தவறு நடந்தாலும் அதனை எவ்வாறு கையாள்வது என்பதில் முன்னுதாரணமாக செயற்பட்ட இவ்விரு பாடசாலைகளின் நிர்வாகம் மற்றும் பழைய மாணவர் சங்கங்களை மதகு ஊடகம் பாராட்டுகிறது.