இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நீடிக்கப்பட்ட கடன் வசதியின் மூன்றாவது தவணை கொடுப்பனவிற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கையுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட 48 மாதங்களுக்கான கடன் வசதியின் இரண்டாவது மீளாய்வு சர்வதேச நாணய நிதிய நிறைவேற்று குழுவினால் நேற்றிரவு (12.06.2024) நிறைவு செய்யப்பட்டமையை அடுத்து இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமது வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை முன்னேற்றத்தை வௌிப்படுத்தியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 டிசம்பர் மாதமளவில் சமூக செலவுகள் தவிர்ந்த ஏனைய இலக்குகளை போதுமான அளவில் பூர்த்தி செய்ய இலங்கையால் முடிந்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதில் காணப்படும் தாமதத்தால் இலங்கையின் பொருளாதாரம் தொடர்ந்தும் எச்சரிக்கை வலயத்திலேயே காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
பொருளாதாரத்தை சரியான பாதைக்குக் கொண்டுவருவதற்காக கடன் மறுசீரமைப்பு செயன்முறையை விரைவுபடுத்துவதற்கான தேவை தொடர்பிலும் சர்வதேச நாணய நிதியம் இதனூடாக வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது கடன் தவணைக்கு அமைய இலங்கைக்கு 336 மில்லியன் அமெரிக்க டொலர் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது.
இலங்கைக்கு வழங்கப்பட்ட 2.9 பில்லியன் டொலர் நீடிக்கப்பட்ட கடன் வசதியானது சமமான கடன் தவணைகளின் ஊடாக இலங்கைக்கு விடுவிக்கப்படவுள்ளது.
ஒவ்வொரு கடன் தவணையும் விடுவிக்கப்பட்ட பின்னர் இலங்கை ஏற்படுத்திக்கொண்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு அடுத்த கடன் தவணை விடுவிக்கப்படவுள்ளது.
இலங்கைக்கு இதுவரையில் 2 தவணை கடன்கள் கிடைத்துள்ளதுடன் அதன் பெறுமதி 667 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇