மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனையின் கீழான வைத்தியசாலைகளில் நோயாளிகளின் பாதுகாப்பு சம்பந்தமான மாவட்ட மட்ட போட்டியொன்று ஒழுங்குபடுத்தப்பட்டு வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வானது அண்மையில் பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன் தலைமையில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையில் நடைபெற்றது.
நான்கு ஆதார வைத்தியசாலைகளும் 10 பிரதேச வைத்தியசாலைகளும் பங்குபற்றியிருந்த இப்போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கும், பங்குபற்றியவர்களுக்குமான பரிசில்களை இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்த மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி மளின்டன் கொஸ்தா வழங்கி வைத்துள்ளார்.
இந்த போட்டியின் நடுவர்களாக வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன், வைத்திய கலாநிதி மயூரன் நாகலிங்கம் மற்றும் வைத்தியர் தயாலினி சசிகுமார் ஆகியோர் பங்களிப்பு செய்திருந்தார்கள்.
நோயாளிகளின் பாதுகாப்பு சுகாதார திணைக்களத்தை பொறுத்தவரையில் மிக முக்கியமானது. அந்தவகையில் எம்மால் முடிந்த பங்களிப்பை நாம் எமது வைத்தியசாலைகளில் உறுதிப்படுத்தவேண்டியதும் அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டியதும் கடமையாகுமென இந்நிகழ்வினை தலைமை தாங்கி நடாத்திய மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன் அவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇