கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் ஊடாக பொருளாதார – தொழிநுட்பத் துறைகளை ஒருங்கிணைப்பது குறித்து அரசாங்கத்தின் விசேட கவனம் செலுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இலங்கையில் முதலீடுகளை ஊக்குவித்து கடல்சார் செயற்பாடுகளை இலகுபடுத்தும் நிதி வலயமாக கொழும்பு துறைமுக நகரத்தை கட்டமைப்பதே எமது நோக்கமாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, அதற்குள் தொழில் நிறுவனங்களின் அபிவிருத்தி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பப் பயன்பாடுகளை உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டுக்கான ‘DigiEcon’ உலக முதலீட்டு மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2024ஆம் ஆண்டுக்கான ‘DigiEcon’ உலக முதலீட்டு மாநாடு ‘இலங்கையின் இதுவரை பயன்படுத்தப்படாத திறனைப் பயன்படுத்துதல்’ எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பில் 25.06.2024 அன்று ஆரம்பமானது.
ஆரம்ப அமர்வின் பின்னர், தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க ஆகியோரின் பங்கேற்புடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.
மேலும், இந்த மாநாட்டுடன் இணைந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் IFS இன் பிரதம நிறைவேற்று அதிகாரி மார்க் மொபட் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்றும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
”நாம் விரைவான வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டுமானால், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் முழு புத்தாக்க கட்டமைப்பு அவசியம். அதை சுற்றுலா மற்றும் விவசாய நவீனமயமாக்கல் மூலம் ஆரம்பிக்க முடியும். இத்துறை மற்றொரு வேகமாக வளர்ந்து வரும் துறையாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனை எவ்வாறு மேம்படுத்துவது? எங்கிருந்து அதற்கான பயணத்தை ஆரம்பிப்பது என்ற கேள்விகள் உள்ளன.
அதற்காக முதலில், நமது பொருளாதாரத்தில் இந்தத் துறையை எவ்வாறு விரிவுபடுத்துவது என்பதைக் கண்டறிய வேண்டும். டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் புத்தாக்கம் என்பன நமக்கு எவ்வாறு பயனளிக்கும் என்று ஆராய வேண்டும்.
நாம் தற்போது அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய துறைகளை அடையாளம் கண்டுள்ளோம். விவசாய நவீனமயமாக்கல் டிஜிட்டல் துறையின் விரிவாக்கத்துடன் கைகோர்த்து செல்லும். இரண்டாவதாக, பொருளாதார நெருக்கடி மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்பாடு. அந்த தொழில்நுட்பத்தை உருவாக்கி பயன்படுத்தக்கூடிய பணியாளர்கள் தேவை குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.
டிஜிட்டல் பொருளாதார கேள்வி அதிகரித்துள்ளது. ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் எதிர்கால தேவைகளைப் பார்க்க வேண்டியது அவசியம். வன்பொருள் மற்றும் மென்பொருள் துறைகளை உள்ளடக்கிய சீனா மற்றும் இந்தியா ஆகிய இரண்டு ஜாம்பவான்களுக்கு இடையே நாம் இருக்கிறோம். அந்த அறிவைப் பயன்படுத்தி மேற்படி நாடுகளுடன் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்.
தனியார் துறையில் கிடைக்கும் வாய்ப்புகள் குறித்து ஏற்கனவே இந்தியாவுடன் கலந்துரையாடலை தொடங்கியுள்ளோம். இலங்கை மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கம் (SLASSCOM) மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிக செயல்முறை முகாமைத்துவ நிறுவனங்களின் அரச சார்பற்ற இந்திய வர்த்தக சங்கம் (NASSCOM) ஆகியவை இதற்கு ஒத்துழைக்க முன்வந்துள்ளன. மேலும் பல நிறுவனங்களும் இணைந்துகொள்ளும் என நம்புகிறோம்.
இந்த வர்த்தகத்தை உருவாக்கும் அதேநேரம் நமக்கான தேசிய களத்தை உருவாக்குவதற்கான ஒத்துழைப்பை பெறவும் நாம் முயற்சிக்கிறோம். சீனாவுடனான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளோம். அதன் முடிவுகள் வெற்றிகரமாக அமையுமென நம்புகிறோம். நாம் ஆசியாவிலிருந்தே பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். அதன்போது பலதரப்பட்ட துறைகள் குறித்து கனவம் செலுத்த வேண்டியதும் அவசியமாகும்.
டிஜிட்டல் பரிமாற்ற முகவர் நிலையமொன்றை அமைக்க இருக்கிறோம். முன்பு, கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்திய நாங்கள், இப்போது பொருளாதார மற்றும் தொழில்நுட்ப அம்சங்களை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்துகிறோம். நாங்கள் அறிமுகப்படுத்தும் இறுதி புதிய நிறுவனம் செயற்கை நுண்ணறிவுக்கான தேசிய மையமாகும்.
நமது பல்கலைக்கழகங்களில் இருக்கும் வசதிகளை மேம்படுத்தி விரிவுபடுத்தி வருகிறோம். பல்கலைக்கழகங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) கற்பித்தலை அறிமுகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் உயர் தொழில்நுட்ப நகரங்களுக்கும் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இதற்காக குறைந்தபட்சம் 100 ஏக்கர் அல்லது அதற்கும் அதிகமான பரப்பளவு கொண்ட கொழும்பின் புறநகர் பகுதியில் காணியொன்றை பெறுவது குறித்து கவனம் செலுத்தியுள்ளோம். யாழ்ப்பாணம் போன்ற சிறிய பகுதிகளில் 25 முதல் 50 ஏக்கர் வரையிலான நகரங்களை நிறுவ முடியும். ஒரு பாரிய அதிதொழில்நுட்ப நகரம் கொழும்பிலும் மற்றொன்று கண்டியிலும் நிறுவ எதிர்பார்க்கிறோம்” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்,
”ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைநோக்கு பார்வைகொண்ட தலைமைத்துவத்தின் கீழ், இலங்கை குறிப்பிடத்தக்க பொருளாதார மறுமலர்ச்சியை அடைந்துள்ளது. இது டிஜிட்டல் முதலீட்டு உச்சிமாநாட்டை இங்கு நடத்துவதற்கு பெரிதும் காரணமாக அமைந்தது.
இலங்கையில் தனிநபர் இணையப் பாவனை கடந்த வருடத்தில் 3.9% இனால் அதிகரித்துள்ளது. இது உலகளாவிய சராசரியான 1.8% ஐ விட அதிகமாகும். சமூகவலைத்தளப் பயன்பாடு 6.5% இனால் அதிகரித்துள்ளதோடு கைபேசிப் பயன்பாடு 148% இனால் அதிகரித்துள்ளது.” என்று தெரிவித்தார்.
முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம,
“DigiEcon திட்டம் தொழில்நுட்ப அமைச்சுடன் இணைந்து குறிப்பிடத்தக்க பணிகளை செய்துள்ளது. மேலும், அரச துறையின் டிஜிட்டல் மயமாக்கல் முதலீட்டை ஊக்குவிப்பதில் முக்கிய காரணியாக உள்ளது. சுங்கச் சரிபார்ப்பு மற்றும் விநியோக டிஜிட்டல் மயமாக்கல் போன்ற தொழில்நுட்ப அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட அண்மைய திட்டங்கள், குறிப்பாக வெளிநாட்டு முதலீட்டிற்கு முன்னர் சிக்கலான செயல்முறைகளை முறைப்படுத்தியுள்ளன.” என்று தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்னாயக்க:
”பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையை உருவாக்குவதற்காக இலங்கையில் இதுவரை பணவியல், நிதி மற்றும் நிர்வாகத் துறைகளில் குறிப்பிடத்தக்க கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நிதித்துறையில் மத்திய வங்கிச் சட்டம், பொது நிதி முகாமைத்துவச் சட்டம், பொதுக் கடன் முகாமைத்துவச் சட்டம் போன்ற புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் மத்திய வங்கியின் சுதந்திரத்தை மேம்படுத்துதல், ஒழுக்கமான நிதி முகாமைத்துவம் மற்றும் பொதுக் கடனை திறம்பட நிர்வகித்தல் ஆகியவற்றை உறுதிசெய்து, அதன் மூலம் மிகவும் நிலையான மற்றும் கணிக்கக்கூடிய பொருளாதார சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன” என்று தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதியின் சட்டத்தரணி அலி சப்ரி, இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong, இராஜதந்திரிகள், தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் கலாநிதி தர்மசிறி குமாரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, அமைச்சின் செயலாளர்கள் மற்றும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇