முக்கிய பொருளாதாரத் துறைகளில் நீண்டகால முதலீடுகளை ஊக்குவிப்பது உட்பட இலங்கையின் பொருளாதார மீட்சிக்குத் தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் என இந்தியா அறிவித்துள்ளது. இந்தியாவின் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கி அமைக்கப்பட்ட அதிகாரப்பூர்வ கடன் வழங்குநர் குழு, கடந்த ஆண்டு முதல் இலங்கையுடன் பல சுற்றுப் பேச்சு வார்த்தைகளை நடத்தியது.
அதன் பலனாக 26.06.2024 அன்று இலங்கைக்கும் கடன் வழங்குநர் குழுவுக்கும் இடையில், கடன் மறுசீரமைப்புக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
அந்தக் குழுவின் இணைத் தலைமைகளில் ஒன்றாக, பிரான்ஸ் மற்றும் ஜப்பானுடன் இணைந்து, இலங்கைப் பொருளாதாரத்தின் ஸ்திரப்படுத்தல், மீட்சி மற்றும் வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பில் இந்தியா உறுதியாக உள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 4 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியைச் சுட்டிக்காட்டிய இந்திய வெளிவிவகார அமைச்சு, சர்வதேச நாணய நிதியத்திற்கு நிதியளிப்பு உத்தரவாதங்களை வழங்கிய முதல் கடன் வழங்கும் நாடு இந்தியாவாகும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇