2024.07.22 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:
- இலங்கையில் சமூகப் பாதுகாப்புக் கொள்கை
சமகால சமூகப் பாதுகாப்புக் கட்டமைப்பு ஒன்றிணைந்துள்ள, ஒருவருக்கொருவர் தொடர்புபடாத வேலைத்திட்டங்கள், உத்தேச முறைகள், நிறுவனங்கள் மற்றும் வெளியீடுகளால் குறித்த சமூகப் பாதுகாப்பு செயன்முறையில் காணப்படுகின்ற மட்டுப்படுத்தப்பட்ட வினைத்திறன் மற்றும் தேசிய அபிவிருத்திக்கு வழங்குகின்ற ஒத்துழைப்பு குறைவாக இருக்கின்றமையை எடுத்துக் காட்டுகின்றது. அதற்கமைய, நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு இலங்கைக்கான தேசிய சமூகப் பாதுகாப்புக் கொள்கையின் தேவையைக் கண்டறிந்துள்ளது. அதற்காக, அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்புடன், சரியான ஒருங்கிணைப்பு மற்றும் இணங்கிய நிலையுடன் கூடிய சமூகப் பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்குவதற்காக மூலோபாய ரீதியான வழிகாட்டலை வழங்குவதற்காக தேசிய சமூகப் பாதுகாப்புக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் வேலைச்சட்டத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய அறிக்கையைத் தயாரித்தல்
காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் வேலைச்சட்டகம் மற்றும் பரிஸ் ஒப்பந்தத்திற்கமைய, இலங்கை காலநிலை மாற்றம் தொடர்பான தேசிய தொடர்பாடல் அறிக்கையைத் தயாரித்து ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான வேலைச்சட்டக சமவாயத்திற்குச் சமர்ப்பித்தல் வேண்டும். அதற்கமைய, முதலாவது இருதரப்பு வெளிப்படை பற்றிய அறிக்கை 2024.12.31 ஆம் திகதியாகும் போதும் இரண்டாவது இருதரப்பு வெளிப்படை பற்றிய அறிக்கை 2026.12.31 அன்றும் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அத்துடன், இலங்கை தனது நான்காவது தேசிய தொடர்பாடல் அறிக்கை 2027 ஆம் ஆண்டில் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. 2024 – 2028 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த அறிக்கையைத் தயாரித்து சமர்ப்பிப்பதற்கமைய தேவையான நிதியைப் பெற்றுக் கொள்வதற்காக சுற்றாடல் அமைச்சு கருத்திட்ட அறிக்கையை உலகளாவிய ‘சுற்றாடல் வசதி’ இற்கு சமர்ப்பித்துள்ளது. குறித்த கருத்திட்ட அறிக்கையின் அடிப்படையில் அறிக்கைகளைத் தயாரிப்பதற்காக 1.23 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்குவதற்கு ‘சுற்றாடல் வசதி’ உடன்பாடு தெரிவித்துள்ளது. குறித்த நிதியைப் பெற்றுக் கொள்வதற்காக உரிய ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக சுற்றாடல் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- சுதேச மருத்துவ பீடத்தின் விடுதி வசதிகளுக்காக கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு காணித் துண்டொன்றை வழங்கல்
சுதேச மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தில் கற்கும் மாணவர்களின் விடுதி வசதிகளுக்காக நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 0.1765 ஹெக்ரெயார் காணித்துண்டு மற்றும் அதிலமைந்துள்ள கட்டிடங்களை அமைச்சரவை அங்கீகாரத்துடன் 50 வருடகால குத்தகை அடிப்படையில் அப்போதிருந்த உயர்கல்வி அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2023.02.13 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் மூலம் சுதேச மருத்துவ விஞ்ஞான நிறுவனமானது கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கற்கை பீடமாகத் தாபிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த கற்கைகள் பீடத்தால் குறித்த காணியை மாணவர்களின் விடுதி வசதிகளுக்காகப் பயன்படுத்த வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இலக்கம் 330, கலாநிதி என்.எம்.பெரேரா மாவத்தை, கொழும்பு 08 இல்; அமைந்துள்ள காணித்துண்டை சுதேச மருத்துவக் கற்கைகள் பீட மாணவர்களின் விடுதி வசதிகளுக்காகப் பயன்படுத்தும் வகையில் கொழும்புப் பல்கலைக்கழகத்திற்கு ஒப்படைப்பதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- கட்டுநாயக்க பொறியியல் தொழிநுட்ப நிறுவனத்தின் டிப்ளோமா பாடநெறிகளை பட்டப்படிப்புப் பாடநெறிகளாக தரமுயர்த்துதல்
கட்டுநாயக்க, தொழிநுட்பவியலாளர்களைப் பயிற்றுவிக்கும் நிறுவகம், தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையின் கீழ் 1985 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அது 2006 ஆம் ஆண்டு தொடக்கம் பொறியியல் தொழிநுட்ப நிறுவகமாகத் தாபிக்கப்பட்டுள்ளது. அந்நிறுவகம் 04 ஆண்டுகள் கற்கைக் காலத்தைப் பூர்த்தி செய்கின்ற மாணவர்களுக்கு தேசிய பொறியியல் டிப்ளோமா சான்றிதழை வழங்குகின்றது. குறித்த டிப்ளோமா, பொறியியல் தொழிநுட்ப பட்டப்படிப்பாகத் தரமுயர்த்துவதற்காக வாழ்க்கைத் தொழில்சார் தொழிநுட்பப் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபை உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கிணங்க, பொறியியல் தொழிநுட்பப் பட்டத்தை வழங்குவதற்காக அந்நிறுவனங்கள் இரண்டுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் சமர்;ப்பித்துள்ளது.
- தற்காலிகமாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி உத்தேசத் திட்டத்தின் கீழ் பதப்படுத்தப்பட்ட இறப்பர் பால் மற்றும் இறப்பர் சீட் இறக்குமதி செய்தல்
இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகின்ற கனரக ரயர் தொழிற்சாலைகளுக்கான 60,240 மெற்றிக்தொன் தொழிநுட்ப ரீதியாகப் பதக்கூறிடப்பட்ட இறப்பருக்கான கேள்வி காணப்படுவதுடன், நாட்டில் நிலவுகின்ற மோசமான ஒட்டுப்பால் தட்டுப்பாடு காரணமாக உள்ளுர் உற்பத்தியாளர்களுக்கு குறித்த கேள்விக்கான வழங்கலை மேற்கொள்ள முடியாத நிலைமை தோன்றியுள்ளது. அதற்கமைய, இறப்பர் அபிவிருத்தித் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதும், மற்றும் இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றுள்ள இலங்கை தொழிநுட்ப ரீதியாகப் பதக்கூறிடப்பட்ட இறப்பர் உற்பத்திகளுக்குத் தேவையான பதப்படுத்தப்பட்ட இறப்பர் பால் மற்றும் பதப்படுத்தப்பட்ட இறப்பர் பாலைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட சீட் ( Sheets ) ஏற்றுமதிப் பணிகளுக்கான தற்காலிக இறக்குமதி உத்தேசத் திட்டம் ( TIEP ) இன் கீழ் இறக்குமதி செய்வதற்காக அனுமதி வழங்குவதற்காக விவசாய மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- மஹரகம, தலபத்பிட்டிய, நவறோஹல வீதியில் பழைய கால்வாயில் அமைந்துள்ள காணித்துண்டை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஒப்படைத்தல்
மஹரகம பிரதேச செயலகப் பிரிவில் தலபத்பிட்டிய கிராமத்தில் அமைந்துள்ள 27.5 ஹெக்ரெயார் காணித்துண்டு 1984 ஆம் ஆண்டு நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், குறித்த காணி மஹரகம, தலபத்பிட்டிய, நவறோஹல வீதியில் அமைந்துள்ளதும், அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதுமான பழைய கால்வாய் குறிப்பிடப்பட்டுள்ள காணி நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு முறைசார்ந்த வகையில் ஒப்படைக்கப்படவில்லை. அதற்கமைய, குறித்த காணியின் பழைய கால்வாய் குறிப்பிடப்பட்டுள்ள காணித்துண்டை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு கட்டண அறவீடுகளின்றி அளிப்புப் பத்திரத்தின் மூலம் ஒப்படைப்பதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- பேர வாவியில், பறவைத் தீவு அமைந்துள்ள காணித்துண்டை அபிவிருத்தி செய்வதற்காக ஸ்ரீஜினரத்ன பிக்குமார் பயிற்சிக் கல்லூரியின் செயற்குழுவுக்கு நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் வழங்கல்
2000 ஆம் ஆண்டில் கொழும்பு நகர அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு பகுதியாக பேரவாவி புனரமைப்புக் கருத்திட்டத்தின் கீழ் தென்மேல் பேரவாவியில் அமைந்துள்ள 143 பேர்ச்சர்ஸ் காணியில் அமைந்துள்ள பறவைத்தீவு நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு கையகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பயன்பாட்டு நிலையிலுள்ள குறித்த காணித்துண்டை பௌத்த புனிதபூமியாகவும் மற்றும் கலாச்சார மரபுரிமைகளை எடுத்துக்காட்டுகின்ற சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கின்ற இடமாக அபிவிருத்தி செய்வதற்கு கங்காராம விகாரையின் விகாராதிபதி தேரர் அவர்கள் கோரிக்கை சமர்ப்பித்துள்ளார். அதற்கிணங்க, குறித்த காணித்துண்டை அபிவிருத்திப் பணிகளுக்காக ஸ்ரீ ஜினரத்ன பிக்குமார் பயிற்சிக் கல்லூரியின் செயற்குழுவுக்கு அரச பிரதம விலைமதிப்பீட்டாளர் தீர்மானிக்கின்ற வரிப் பெறுமதியின் அடிப்படையில் 50 வருடங்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- கொவிட் – 19 தொற்றுநோய்க் காலத்தில் இலங்கையில் வலுவாக்கம் செய்யப்பட்ட கட்டாய உடற்தகனக் கொள்கைக்கு மன்னிப்புக் கோரல்
கொவிட் – 19 தொற்றுநோய்க் காலப்பகுதியில் சிகிச்சை முகாமைத்துவம் தொடர்பாக சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்ட வழிகாட்டல்களில் குறிப்பிட்;டவாறு, வைரசு தொற்று ஏற்பட்டு உயிரிழந்த ஆட்களின் பூதவுடல்களை அடக்கம் செய்வதற்கான பொறிமுறையாக உடற்தகன முறை விதந்துரைக்கப்பட்டிருந்தது. அதற்கமைய, கொவிட் – 19 தொற்றுக்குள்ளாகிய 276 முஸ்லிம்களின் பூதவுடல்கள் தகனஞ் செய்யப்பட்டுள்ளதுடன், பின்னர் 2021 பெப்ரவரி மாதத்தில் அவ்வாறான நபர்களுக்கு மிகவும் மட்டுப்பாடுகளுடன் கூடிய நல்லடக்கத்திற்கான அனுமதி வழங்கப்பட்டது. 2021 யூலை மாதத்தில் ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்புடன் அப்போதிருந்த நீர் வழங்கல் அமைச்சால் ஆற்றுநீர், மருத்துவமனைகள், தனிமைப்படுத்தல் நிலையங்கள் மற்றும் ஏனைய இடங்களிலிருந்து வெளியேற்றப்படும் அசுத்தநீர் உள்ளிட்ட கொழும்பு கண்டி நீரியல் பிரதேசங்களில் SARS –CoV-2 வைரசை அடையாளங் காண்பதற்கான ஆய்வு ஆரம்பிக்கப்பட்டது. குறித்த ஆய்வின் பிரகாரம் மேற்புற நீரில் எவ்வித வைரசும் இல்லாமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2024 மார்ச் மாதத்தில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் காணப்படும் நீர் தொழிநுட்பத்திற்கான சீனா – இலங்கை ஒருங்கிணைந்து ஆராய்ச்சி மற்றும் மாதிரி நிலையத்தின் மூலம் இரண்டாவது கற்கையும் பூர்த்தி செய்யப்பட்டதுடன், அதன்மூலம் SARS –CoV-2 வைரசு நிலத்தடி நீர் உள்ளிட்ட நீர்மூலங்களுக்கு ஊடுகடத்தப்படும் அடிப்படை ஆற்றல்வளங்கல் மலம் மற்றும் சிறுநீர் மூலமாகவே மாத்திரமே பரவுவதுடன், பாதுகாப்பான நல்லடக்கத்தின் மூலம் அல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கிணங்க, கொவிட் – 19 தொற்றுநோய்க் காலப்பகுதியில் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டாய உடற்தகனக் கொள்கையால் பாதிக்கப்பட்ட சமூகங்களிடம் இலங்கை அரசு மன்னிப்புக் கோருவதற்காக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்டகட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் அவர்களும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- மதச் சடங்குகளுக்கமைய பூதவுடல்கள் நல்லடக்கம் மற்றும் தகனஞ் செய்தல் தொடர்பான உத்தேச சட்டம்
கொவிட் – 19 தொற்றுநோய்க் காலப்பகுதியில் சிகிச்சை முகாமைத்துவம் தொடர்பாக சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்ட வழிகாட்டல்களில் குறிப்பிட்;டவாறு, வைரசு தொற்றுக்குள்ளாகி இறந்தவர்களின் பூதவுடல்கள் தகனஞ் செய்தல் கட்டாயமாக்கப்பட்டது. இத்தீர்மானம் பல்வேறு மதக் குழுக்களையும், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களையும், குறிப்பாக இஸ்லாமியர்களின் மனம் புண்படுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. அதுதொடர்பாகப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக் கற்கைகளின் பிரகாரம், கொவிட் வைரசு நிலத்தடி நீர் உள்ளிட்ட நீர்மூலங்களுக்கு ஊடுகடத்தப்படும் அடிப்படை ஆற்றல்வளங்கல் மலம் மற்றும் சிறுநீர் மூலமாகவே மாத்திரமே பரவுவதுடன், பாதுகாப்பான நல்லடக்கத்தின் மூலம் அல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால், எதிர்வரும் காலங்களில் இவ்வாறான நிலைமைகளைத் தவிர்த்துக் கொள்வதற்காக ஏதேனுமொரு ஆளுக்கு அல்லது உறவினருக்கு தமது சுயவிருப்பின் பிரகாரம் உயிரிழந்தவர்களின் உடலை நல்லடக்கம் செய்வதற்கோ அல்லது தகனஞ் செய்வதற்கான தெரிவுக்கு இடமளிக்கும் வகையில் சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்குக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன், தேவையாயின் மருத்துவ பீடங்களுக்கு உடலங்களை வழங்குவதற்குமான சட்டத்தை அறிமுகப்படுத்துவது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கிணங்க, புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் அவர்களும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- மஹிந்த ராஜபக்ஷ தேசிய திரைப்படப் பூங்காவை அரச – தனியார் பங்குடமையின் கீழ் நடாத்திச் செல்லல்
மஹிந்த ராஜபக்ஷ தேசிய திரைப்படப் பூங்காவை அரச – தனியார் பங்குடமை முறைமையின் கீழ் முகாமைத்துவம் செய்வதற்காக அரச – தனியார் பங்குடமைக்கான தேசிய முகவராண்மை நிறுவனத்தின் விதந்துரைகளைப் பெற்றுக் கொள்வதற்காக 2023.05.02 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, குறித்தமுகவராண்மை நிறுவனத்தின் விதந்துரைக்கமைய மஹிந்த ராஜபக்ஷ தேசிய திரைப்படப் பூங்காவை அரச – தனியார் பங்குடமையின் கீழ் நடாத்திச் செல்வதற்கும் பராமரிப்பதற்கும் பொருத்தமான முதலீட்டாளர்களை அடையாளங் காண்பதற்கான பெறுகைச் செயன்முறையைக் கடைப்பிடிப்பதற்கும், அடையாளங் காணப்பட்ட முதலீட்டாளர்களுடன் 30 ஆண்டுகளுக்கு குத்தகை ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- 2024 – 2027 வரையான காலப்பகுதிக்கு இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான உலர் பொருட்கள் போக்குவரத்துக் கப்பல்களைச் சேவையில் அமர்த்துதல்
வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான Mv.Ceylon breeze மற்றும் Mv. Ceylon Princess கப்பல்களை 2024/2025 தொடக்கம் 2026ஃ2027 வரையான காலப்பகுதிக்கு வாடகைக்கு வழங்கல் மற்றும் குறித்த வணிக முகாமைத்துவம் போன்ற பணிகளுக்காக போட்டி விலைமுறி கோரப்பட்டுள்ளது. அதற்கிணங்க, இரண்டு (02) விலைமனுக்கள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், குறித்த விலைமனுக்கள் மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர், தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழு சமர்ப்பித்துள்ள விதந்துரைகளுக்கமைய மூன்று (03) ஆண்டுகளுக்கு M/s Wallem Shipping (Singapore) Pte Ltd இற்கு குறித்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- கைத்தறி நெசவுக் கைத்தொழிலில் ஈடுபடுகின்ற பெண்கள் மற்றும் இளைஞர் சமூகத்தை பொருளாதார ரீதியாக வலுவூட்டுவதற்கான விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
கைத்தறி நெசவுக் கைத்தொழிலில் ஈடுபடுகின்ற பெண்கள் மற்றும் இளைஞர் சமூகத்தை பொருளாதார ரீதியாக வலுவூட்டுவதற்கான விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் கைத்தொழில் அமைச்சுக்கு 300 மில்லியன் ரூபாய்கள் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, கைத்தறி நெசவுக் கைத்தொழிலில் ஈடுபடுகின்ற தொழிலாளர்கள் எதிர்கொள்கின்ற மூலப்பொருட்களைப் பெற்றுக் கொள்வதிலுள்ள சிரமங்கள், தொழில்முயற்சித் திறன்கள் குறைவடைதல், சுற்றாடல் நேயம்மிக்கதும் போதியளவு உட்கட்டமைப்பு வசதிகள் இன்மை, சந்தைக் கேள்விக்கு ஏற்புடைய வகையிலான தரப்பண்பான உற்பத்தியின்மை, மற்றும் போதியளவு சந்தைப்படுத்தல் வசதிகளின்மை போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக ஒருங்கிணைந்த கருத்திட்ட முன்மொழிவு தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக தேசிய பெறுகைகள் திணைக்களத்தின் விதந்துரைகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதற்கிணங்க, குறித்த கருத்திட்ட முன்மொழிவின் மூலம் அடையாளங் காணப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களை கைத்தொழில் அமைச்சின் கீழ் காணப்படும் தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகாரசபை, நெசவுத் திணைக்களம், இலங்கை சலுசல நிறுவனம் மற்றும் தேசிய அலங்கரிப்பு நிலையம் போன்ற நிறுவனங்கள் மூலம் நடைமுறைப்படுத்துவதற்காக கைத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- கடலாதெனிய சத்தர்மதிலக்க இராஜமஹாவிகாரையில் “கைடிகை” புத்தர்சிலைக் கர்ப்பக்கிரக மரபை பாதுகாத்தல்
கடலாதெனிய சத்தர்மதிலக்க இராஜமஹாவிகாரை பல்லவர் கட்டிடக்கலை நிர்மாணத்திற்கமைய கம்பளை இராசதானிக் காலத்தில் தர்மகீர்த்தி எனும் பிக்குவின் தலைமையில் கட்டப்பட்டுள்ளது. குறித்த இராஜமஹாவிகாரை “கைடிகை” மரபுக்கமைவான புத்தர் சிலைக் கர்ப்பக்கிரகத்தைப் பாதுகாப்பதற்காக கூரையொன்றை அமைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்காக, தொல்லியல் திணைக்களத்தில் தேவையான மனித வளம் மற்றும் தொழிநுட்ப உபகரணங்கள் இன்மையால், அதற்கான வளங்கள் மற்றும் இயலுமை கொண்ட நிறுவனமான பொறியியல் பணிகளுக்கான மத்திய ஆலோசனைப் பணியகத்திற்கு ( CECB ) அப்பணிகளை ஒப்படைப்பதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- வரி மேன்முறையீடு செயன்முறையைத் துரிதப்படுத்துவதற்காக 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டத்தைத் திருத்தம் செய்தல்
உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தீர்மானம் தொடர்பாக திருப்தியளிக்காத ஏதேனுமொரு வரி செலுத்துநர் குறித்த தீர்மானம் பற்றிய உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திற்கு மேன்முறையீட்டை சமர்ப்பிக்கலாம். அதுதொடர்பான தீர்மானத்தை 02 ஆண்டுகளை விஞ்சுவதற்கு முன்னர் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் அவர்களால் வழங்கப்படல் வேண்டும். குறித்த தீர்மானம் பற்றி திருப்தியளிக்காத ஏதேனுமொரு வரி செலுத்துநர் அத்தீர்மானத்தை மீளாய்வு செய்வதற்காக வரி மேன்முறையீட்டு ஆணைக்குழுவுக்கு மேன்முறையீடு சமர்ப்பிப்பதற்கான இயலுமை காணப்படுவதுடன், அவ்வாறான மீளாய்வு விண்ணப்பமொன்று கிடைக்கப்பெற்ற தினத்திலிருந்து வரி மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் தீர்மானம் 270 நாட்களில் வழங்கப்படல் வேண்டும். அதற்கிணங்க, குறித்த மேன்முறையீட்டு செயன்முறைக்காக மூன்று ஆண்டுகள் எடுக்கின்றதுடன், அதனால் கடந்த காலங்களில் 73 பில்லியன் ரூபாய்கள் வரித்தொகையை அரசுக்கு அறிவிட முடியாத நிலைமை காணப்படுகின்றது. குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு, வரி மேன்முறையீட்டுச் செயன்முறையைத் துரிதப்படுத்தல் மற்றும் முறைமைப்படுத்துவதற்காக 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டத்திற்குப் பொருத்தமான திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்காக சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- உத்தேச “தேசிய திரைப்பட அபிவிருத்தி ஆணைக்குழு” இற்குப் பதிலாக “கு Films srilanka ” எனும் பெயரிலான ஒழுங்குமுறைப்படுத்தல் நிறுவனத்தைத் தாபித்தல்
தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் தற்போது மேற்கொண்டு வருகின்ற வணிக நடவடிக்கைகளிலிருந்து விலகி ஒழுங்குமுறைப்படுத்தலை அடிப்படையாகக் கொண்டு செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும், டிஜிட்டல் தளத்திற்குப் பிரவேசிப்பதற்கான வசதிகள் மற்றும் வாய்ப்புக்களை வழங்குவதற்கும், அதன்மூலம் உள்நாட்டு திரைப்படங்களை சர்வதேச ரீதியில் கொண்டு செல்வதற்கும் இயலுமாகும் வகையில் புதிய நிறுவனக் கட்டமைப்பை தாபிப்பதற்காக “தேசிய திரைப்பட அபிவிருத்தி ஆணைக்குழுவை” அமைப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனை, 2024.04.29 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. அங்கு, குறித்த அமைச்சரவை யோசனை பற்றி திரைப்படத் தொழிற்றுறையில் ஈடுபடுகின்ற அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடிக் கருத்துக்கள் பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த தரப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் “தேசிய திரைப்பட அபிவிருத்தி ஆணைக்குழு” இற்குப் பதிலாக “ Films srilanka ” எனும் பெயரிடுவதற்கும், உத்தேச சட்டமூலத்தைத் தயாரிக்கும் போது, குறித்த கூட்டங்களில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளையும் கருத்தில் எடுத்துக் கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, குறித்த விடயங்களின் அடிப்படையில் “ Films srilanka ” நிறுவனத்தைத் தாபிப்பதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- 2024 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தைத் திருத்தம் செய்தல்
நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கிணங்க, குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர், 2024 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச் சட்டம் தற்போது வலுவுடையதாக உள்ளது. குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு முன்னர் துறைசார் நிபுணர்கள் சட்டமூலத்தின் ஒருசில பிரிவுகள் பற்றிய திருத்தங்கள் முன்மொழியப்பட்டிருப்பினும், குழுநிலை விவாதத்தின் போது அவ்வாறான திருத்தங்களை சட்டமூலத்தில் உட்சேர்த்துக் கொள்வதற்கு இயலுமை கிட்டவில்லை. அதற்கமைய, குறித்த திருத்தங்களை உள்ளடக்கி 2024 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கு சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்காக 2024.02.12 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- ஊழல் எதிர்ப்புத் தொடர்பான தேசிய நிகழ்ச்சிநிரல்
தற்போதைய அரசாங்கம் 2022 யூலை மாதம் தொடக்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், ஆட்சிமுறையின் தரப்பண்மை விருத்தி செய்து, ஊழல்களை நீக்கி, அரச நிதி மற்றும் கடன் நிலைபேற்றுத் தண்மையை மீண்டும் நிலைநிறுத்தி மற்றும் பொருளாதார நிலைமாற்றங்களை மேற்கொண்டு, தனது முன்னுரிமையான நோக்கங்களாகக் கொண்டுள்ளது. அதற்கமைய, ஊழலுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் சமவாயத்தின் ஏற்பாடுகள் மற்றும் குறித்த சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் நடைமுறைகளை வலுவாக்கம் செய்யும் வகையில் ஊழல் தடுப்புச் சட்டம் (26 ஆம் அத்தியாயம்), 1994 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலஞ்சம் மற்றும் ஊழல் சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுச் சட்டம் மற்றும் 1975 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் சட்டத்தை இரத்துச் செய்து 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை வலுவாக்கம் செய்வதன் மூலம் ஊழல் எதிர்ப்புத் தொடர்பான தேசிய நிகழ்ச்சி நிரலுக்கான அடிப்படை தயாரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தற்போது இவ்வாறான குற்றங்களின் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான சட்டமூலத்தைத் தயாரிக்கும் நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. அதற்கிணங்க, சர்வதேச நாணய நிதியத்தின் ஆட்சிமுறை மதிப்பீட்டின் தொழிநுட்ப ஒத்துழைப்புக்கள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்புக்களுக்கான சட்ட ரீதியான, திட்டமிடப்பட்ட மூலோபாய ரீதியான வேலைச் சட்டகத்திற்கமைய, கீழ்க்காணும் படிமுறைகள் ஊழல் எதிர்ப்புத் தொடர்பான தேசிய நிகழ்ச்சிநிரலின் பிரதான செயற்பாடுகள் அடையாளங் காணப்பட்டுள்ளன :
- 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை வலுவுடையதாக்கல்
- 2025 – 2029 காலப்பகுதிக்கான தேசிய ஊழல் எதிர்ப்புத் திட்டத்தை அபிவிருத்தி செய்தல்
- 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தைத் திருத்தம் செய்தல்
- பயனுள்ளதும், வெளிப்படைத்தன்மையுடன் கூடிய பொறுப்புக்கள் பிரகடனம் மற்றும் அக்கறைசார் முரண்பாடுகள் பற்றிச் செயலாற்றுவதற்கான புதிய பொறிமுறையை அறிமுகப்படுத்தல்
- குற்றங்கள் மூலமும், பணத்தூய்தாக்கல் மூலமும் ஈட்டப்பட்டவை தொடர்பாக செயலாற்றுவதற்கான பொறிமுறையை அறிமுகப்படுத்தல்
- ஊழல் வழக்கு விசாரணைகள் மற்றும் வழக்குத் தொடர்தல் நடவடிக்கைகளைப் பலப்படுத்தல்
- பகுதிப்பயனாளி உரிமைகள் பற்றிய சட்டக் கோவையை பலப்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தில் திருத்தங்களை அறிமுகப்படுத்தல் மற்றும் ஏனைய ஏற்புடைய படிமுறைகளை மேற்கொள்ளல்
- அரச பெறுகைகளின் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக அரச பெறுகைச் சட்டத்தை வலுவுடையதாக்கல்
- 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க மூலோபாய அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் மற்றும் முதலீட்டு சபை மூலம் வரி விடுவிப்புக்கள் பெற்றுக் கொள்ளும் அனைத்துக் கம்பனிகளை வெளியிடல்
- முதலீட்டு ஊக்குவிப்பு நிபந்தனைகள் விலையிடல் மற்றும் முன்மொழிவுகளை மதிப்பீடு செய்வதற்காக தெளிவானதும் வெளிப்படைத்தன்மையுடனான செயன்முறையை வெளியிடும் வரைக்கும், 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க மூலோபாய அபிவிருத்திக் கருத்திட்டச் சட்டத்தைத் தற்காலிகமாக இடைநிறுத்தல்.
- அரச தொழில்முயற்சிகள் மறுசீரமைத்தல் கொள்கையை நடைமுறைப்படுத்தல்
- ஒவ்வொரு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திலும் குறுகியகால ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகயை ஆரம்பித்தல்
- ஊழியர் சேமலாப நிதியத்திற்காக புதிய முகாமைத்துவப் பொறிமுறையை நிறுவுதல்
- வங்கித் துறையில் நிதிப்பிரிவின் கண்காணிப்புக்குரிய சட்டங்கள், ஒழுங்குவிதிகள் மற்றும் நடவடிக்கை முறைகளைத் திருத்தம் செய்தல்
- நீதிச் சேவை ஆணைக்குழுவை வலுவுடையதாக்கல்
- தகவல் அறிதல் உரிமையைப் பலப்படுத்தல்
அதற்கமைய, ஊழல் எதிர்ப்புத் தொடர்பான நிகழ்ச்சிநிரல் ஊழல் எதிர்ப்புப் பற்றிய அரச தேசிய நிகழ்ச்சிநிரலாக கொள்கை ரீதியாக நிறைவேற்றுவதற்கும், குறித்த நிகழ்ச்சிநிரலுக்கமைய நடவடிக்கைகயை மேற்கொள்வதற்கும் ஏற்புடைய வகையில் அனைத்து அதிகாரிகளுக்கும் விதிப்பதற்கும் கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- அரச சொத்துக்கள் முகாமைத்துவ சட்டமூலம்
அரச நிறுவனங்களின் முழு உரித்தும் கொண்டுள்ள, ஒப்படைக்கப்பட்டுள்ள, கையகப்படுத்தப்பட்டுள்ள, மாற்றி வழங்கப்பட்ட, கொண்டுள்ள அல்லது பயன்படுத்துகின்ற நிதியல்லா அசையும் அசையாச் சொத்துக்களை அடையாளங் காணல் மற்றும் தேசிய சொத்து ஆவணத்தைத் தயாரிப்பதற்கும், குறித்த ஆவணத்தைக் காலத்தோடு தழுவியதாக இற்றைப்படுத்துவதற்காக மற்றும் குறித்த சொத்துக்களிலிருந்து சரியான பயன்கள் அரச நிறுவனங்களுக்குக் கிடைக்கின்றமையை உறுதிப்படுத்தல் போன்ற ஏற்பாடுகளை உள்ளடக்கி, அரச சொத்துக்கள் முகாமைத்துவ சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக 2022.10.17 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்;ப்பிப்பதற்கும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- 1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள 2024 ஆண்டின் 09 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகளைப் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்
1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள 2390ஃ19 ஆம் இலக்க, 2024.06.28 திகதிய வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள 2024 ஆண்டின் 09 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகளைப் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- 2024 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பித்தல்
2024-04-29 திகதிய அமைச்சரவை தீர்மானத்தின் மூலம் சைனா ஹாபர் இன்ஜினியரிங் கம்பனி (லங்கா) லிமிட்டட், செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நிலை வியாபாரங்களாக பிரகடனம் செய்வதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த கம்பனிகள் செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நிலை வணிகங்களாக பெயரிடப்பட்டு 2383ஃ34 இலக்க 2024-05-09 திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 53 ஆவது பிரிவின் கீழ் ஒழுங்குவிதிகள் வெளியிடப்பட்டுள்ளன. குறித்த ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. - 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய மின்சார மதியுரைப் பேரவை மற்றும் தேசிய முறைமை தொழில்படுத்துநரை நிறுவுதல்
2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டத்தின் மூலம் மின்சார தொழிற்துறையின் செயற்பாடுகளை வினைத்திறனாக முகாமைத்துவம் செய்வதற்காக மேற்சொல்லப்பட்ட நிறுவன கட்டமைப்பை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதற்கமை, மின்சார துறையின் மறுசீரமைப்பு செயலகம், தேசிய முறைமை தொழில்படுத்துனர் மற்றும் தேசிய மின்சார மதியுரை பேரவை தாபிக்கப்பட வேண்டியுள்ளது. ஏற்கனவே மின்சாரத்துறை மறுசீரமைப்பு செயலகம் நிறுவப்பட்டுள்ளது. அதற்கமைய, மேலே சொல்லப்பட்ட சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய தேசிய மின்சார மதியுரை பேரவையை நிறுவுவதற்கும், தேசிய முறைமை தொழில்படுத்துநருக்காக பணிப்பாளர் சபையை நியமனம் செய்வதற்கும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- 2016 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்டச வேதனச் சட்டத்தைத் திருத்தம் செய்தல்.
தனியார் துறை வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனத்தை 17,500 ரூபா வரைக்கும், தேசிய குறைந்த பட்ச நாட்சம்பளத்தினை ரூபா 700ஃ- வரை அதிகரிக்கக்கூடிய வகையில் 2016 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கு 2024-03-25 திகதிய அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள திருத்த சட்ட வரைபுக்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. மேற்குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்றத்துக்கு அங்கீகாரத்துக்காக சமர்ப்பிப்பதற்கும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- வங்கிகளில் தங்க ஆபரணங்களை அடகு வைத்த நபர்களுக்கு சலுகை வழங்குதல்
கடந்த காலத்தில் நாட்டில் நிலவிய கடுமையான பொருளாதார நெருக்கடியில் அனைத்து பிரிவுகளும் நேரடியாக அல்லது மறைமுகமாக பாதகமான தாக்கத்துக்கு உள்ளானார்கள். அதன் விளைவாக தங்க நகைகளை அடகு வைத்தல் வேகமாக அதிகரித்துள்ளது. 2019 ஆண்டில் ரூபா 210 பில்லியன் அளவிலிருந்த அடகு முற்பண நிலுவைத் தொகை 2024 ஆண்டு மார்ச் மாதமளவில் 571 பில்லியன் வரை அதிகரித்து 172மூ அதிகரிப்பை காட்டியுள்ளது. குறித்த நிலையை கருத்திலெடுத்து உரிமம் பெற்ற வங்கிகள் மூலம் அடகு முற்பணம் பெற்றுள்ள குறைந்த வருமானம் பெறும் நபர்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டிய தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, வாடிக்கையாளர்கள் தனிநபர் அடிப்படையில் 2024 ஜூன் மாதம் 30 திகதி அல்லது அதற்கு முன்னர் உரிமம் பெற்ற வங்கிகளில் பெற்ற முற்பணத்துக்கு வருடாந்தம் 10% உச்ச எல்லைக்கு உட்பட்ட சலுகை வட்டியை திறைசேரியிலிருந்து வழங்குவதற்கு பொருத்தமான வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇