01-08-2024 அன்று மட்டக்களப்பிலுள்ள Green Garden Hotel இல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது போடியார் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி, வெளியிடப்படும் திரையரங்குகள் மற்றும் காட்சி நேரங்கள் போன்றவை படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டன.
இதனடிப்படையில் 23-08-2024 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு முதல் நாள் – முதற் காட்சியும் அதனைத்தொடர்ந்து 24 மற்றும் 29 ஆந் திகதிகளில் தலா மூன்று காட்சிகள் வீதம் மொத்தமாக ஏழு காட்சிகள் மட்டக்களப்பு விஜயா திரையரங்கில் காண்பிக்கப்படவுள்ளது.
இத்திரைப்படமானது குடும்ப நல வைத்திய நிபுணர் பேராசிரியர் க.அருளானந்தம், கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீட சிரேஸ்ட விரிவுரையாளர் சதா சண்முகநாதன் மற்றும் Visual Art Movies நிறுவன உரிமையாளர் ப.முரளிதரன் ஆகியோரின் தயாரிப்பிலும், குறுந்திரைச் செம்மல் கோடீஸ்வரனின் இயக்கத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மண் வாசனையுடன் கூடிய படுவான்கரை பிரதேசத்தையும் வாழ்வியலையும் மையப்படுத்தி உருவாக்கப்பட்ட ஓர் படைப்பாக இத்திரைப்படம் காணப்படுவதாகவும் இத்திரைப்படத்தின் கதை இலங்கை தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்டு குடும்பத்துடன் எல்லா வயதினரும் பார்க்கத்தக்க திரைப்படம் என்பதற்கான U தணிக்கை சான்றிதழையும் பெற்றுள்ளதாக முரளிதரன் தெரிவித்தார்.
இத்திரைப்படத்திற்கான கதை, திரைக்கதை, வசனத்தை ப. முரளிதனும், படப்பிடிப்பு மற்றும் படத்தொகுப்பை புஷ்பகாந்தும், இசையினை A.J. சங்கர்ஜனும் அமைத்துள்ளனர்.
ஜனா RJ, RJ நெலு, ஷாஷா கிரேஸ், சுஜானி பீட்டர், கலைமாமணி காண்டிபன், முரளிதரன், பாரதி கென்னடி, சந்திராவதி, நவரெட்னராஜா உட்பட பலரின் நடிப்பில் போடியார் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ் ஊடக சந்திப்பின்போது எமது சினிமாவின் வர்த்தக அந்தஸ்த்தை உயர்த்தவும், உள்ளூர் கலைஞர்களை ஆதரிக்கவும் தாம் மேற்கொள்ளும் இந்த முயற்சிக்கு ஆதரவு தரும் வகையில் அனைவரும் திரையரங்கிற்கு வந்து இத்திரைப்படத்தைப் பார்வையிடுமாறு படக்குழுவினர் வேண்டுகோளை முன்வைத்தனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇