சிறுநீரை அடக்க முடியாத பிரச்சினை………
பெண்களாக இருப்பதில் பலதரப்பட்ட சிரமங்கள் உண்டு. சகித்துக்கொள்ள முடியாத சிரமங்களில் பெண்ணின் உடல், மனப் பிரச்சினைகளும் அடக்கம். அவற்றில் முக்கியமானது சிறுநீரை அடக்க முடியாமை.
சிறுநீரை அடக்க முடியாத பிரச்சினையை ஆங்கிலத்தில் Urinary incontinence என்கிறோம். இது டீன் ஏஜ் பெண்களுக்கும் வரலாம். ஆனால், இது மெனோபாஸ் பருவத்தில் உள்ள பெண்களுக்கு மிக அதிகம். இப் பிரச்சினையை மூன்று வகைகளாக பிரிக்கலாம். அளவுக்கு அதிகமாக வேலை செய்கிற சிறுநீர்ப்பை திசுக்களின் அழற்சி, இடுப்பெலும்புத் தசைகளின் பலவீனம், சிறுநீர்ப்பையின் திறப்புப் பகுதி குறுகிப்போவது என 3 முக்கிய காரணங்களால் இப் பிரச்சினை வரலாம்.
அறிகுறிகள்
- அடிக்கடி சிறுநீர் கழிக்கிற உணர்வு.
- எங்கே வெளியிடத்துக்குச் சென்றாலும், முதல் வேலையாக பாத்ரூம் எங்கிருக்கிறது என தேடுவது.
- அதைப் பற்றி நினைத்தாலே உடனே சிறுநீர் கசிவது.
- சிறுநீர் கழிக்கத் தயாராவதற்கு முன்பே கசிவு.
- இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது.
தீர்வுகள்
வாழ்க்கை முறையில் மாற்றங்களை ஏற்படுத்துவது… உதாரணத்துக்கு பருமனைக் குறைப்பது, இனிப்பு உணவுகளைத் தவிர்ப்பது, கோப்பி, டீ, ஏரியேட்டட் பானங்களை தவிர்ப்பது, அடிக்கடி பாத்ரூம் செல்வது அல்லது அபூர்வமாக போவது என இரண்டையும் சரி செய்ய வேண்டும்.
நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தத்துக்கான மருந்துகளை தவறாக எடுத்துக்கொண்டாலும், இந்தப் பிரச்சினை வரலாம். அதை சரி செய்ய வேண்டும்.
அளவுக்கு அதிகமாக வேலை செய்கிற சிறுநீர்ப்பை திசுக்களை கட்டுப்படுத்த மருந்துகள் உள்ளன. அவற்றை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பிரச்சினைக்காக எடுத்துக்கொள்கிற மருந்துகள் சில நேரங்களில் மலச்சிக்கல், வாய் உலர்தல் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். மருந்து உட்கொண்ட பிறகும் சிறுநீர் கசிவு இருந்தால், அதை நீண்ட காலம் அலட்சியப்படுத்தியதும், பக்க வாதம் இருப்பதும், பார்க்கின்சன் டிசீஸ் என்கிற பிரச்சினை இருப்பதும் காரணங்களாக இருக்கலாம். அதற்கான பரிசோதனைகளும் சிகிச்சைகளும் உடனடியாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
சிறுநீர் கசிவுப் பிரச்சினையானது பெண்களை மன அழுத்தத்தில் தள்ளக்கூடியது. சுத்தம் காரணமாக டயப்பர் உபயோகிக்க மறுப்பார்கள். மற்றவர் முன் சகஜமாக நடமாட முடியாது. அவசரமாக எழுந்து கழிப்பறைக்கு ஓடும்போது தவறி விழுந்து எலும்பு முறிவுகளை ஏற்படுத்திக் கொள்வார்கள், வயதான பெண்கள்.
இதற்கென சிகிச்சை எடுத்துக்கொண்டால், சிறுநீர் கசிவுப் பிரச்சினையும் சரியாகும்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇