எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு, இன்று (05.09.2024) இரண்டாம் நாளாகவும் இடம்பெறவுள்ளது.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு, 7 இலட்சத்து 12 ஆயிரத்து 319 அரச பணியாளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
இந் நிலையில், 04.09.2024 அன்று ஆரம்பமான அஞ்சல் மூல வாக்களிப்பு நாளை (06.09.2024) வரையில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடைபெறும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அஞ்சல் மூல வாக்களிப்பின் இரண்டாம் நாளான, இன்று முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களிலும் வாக்குகளைப் பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன், நாளைய தினம் (06.09.2024) சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் காரியாலயம், சிரேஷ்ட உதவி காவல்துறை அத்தியட்சகர் காரியாலயம், உதவி காவல்துறை அத்தியட்சகர் காரியாலயம், காவல்துறை நிலையங்கள், விசேட அதிரடிப்படை முகாம்கள் மற்றும் விசேட காவல்துறை பிரிவுகள் என்பனவற்றிலும் அஞ்சல் மூல வாக்குகளைப் பதிவு செய்ய முடியும்.
இதுதவிர, முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களிலும் வாக்குகளைப் பதிவு செய்வதற்கான வாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை அஞ்சல் மூலம் வாக்களிப்பு நடைபெறும் என்பதால், அதற்கான வசதிகளை பணியிடங்களில் ஏற்படுத்திக் கொடுக்குமாறும் அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர்களுக்குத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அஞ்சல் மூல வாக்குகளைக் குறித்த தினங்களில் செலுத்த முடியாதவர்களுக்கு எதிர்வரும் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகள் வாக்களிப்பதற்கான மேலதிக தினங்களாக ஒதுக்கப்பட்டுள்ளன.
அவ்வாறு 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் வாக்களிப்பவர்கள் தாங்கள் கடமையாற்றும் மாவட்டங்களின் மாவட்ட செயலகங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்க வேண்டும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, அலுவலக அடையாள அட்டையைப் பயன்படுத்தி எவரேனும் வாக்களிக்கச் சென்றால், அஞ்சல் மூல வாக்களிப்பைக் கண்காணிக்கும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியினால் நியமிக்கப்பட்ட அதிகாரி ஒருவர் குறித்த வாக்காளரின் ஆள் அடையாளத்தை உறுதி செய்வதற்கான செயற்பாடு முன்னெடுக்கப்படும்.
அவ்வாறில்லாத சந்தர்ப்பத்தில், அலுவலக அடையாள அட்டையைப் பயன்படுத்தி வாக்களிப்பதற்கான வாய்ப்பை வழங்க வேண்டாம் எனச் சகல தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும், தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, அஞ்சல் மூல வாக்களிப்பு இடம்பெறும் நிலையங்கள் மற்றும் அஞ்சல் மூல வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் நிலையங்கள் என்பவற்றுக்கு விசேட காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇