தொடருந்து ஊழியர்களினதும் பொதுமக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தப்படும் வகையிலான வேலைத்திட்டங்களைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற போக்குவரத்து, பெருந்தெருக்கள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலின் போதே அவர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
அத்துடன், வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஒழுங்குபடுத்தல் மற்றும் செயற்திறனுடன் முன்னெடுத்தல் ஆகியன கிராமிய பொருளாதார இலக்குகளை அடைவதற்கு வழிவகுக்கும் எனவும் இதன்போது அவர் தெரிவித்துள்ளார்.
கிராமிய அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்கும்போது பெறுகைச் செயற்பாடுகள் ஒழுங்கு முறைக்கமைய முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், ஒரு சிலருக்கு மாத்திரம் ஒப்பந்தங்கள் கிடைப்பதற்கு மாறாகப் பிரதேச மற்றும் கிராமிய மக்கள் பயனடையும் வகையில் குறித்த வேலைத்திட்டங்களைத் தயாரிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
துறைமுகங்கள், விமான நிலையங்கள், பெருந்தெருக்களை அபிவிருத்தி செய்வது இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு முக்கியமானதாகும் எனவும், அதற்கான வேலைத்திட்டங்களை ஒழுங்குமுறைக்கமைய திட்டமிடுவதன் ஊடாக தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, அமைச்சினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாக மீளாய்வு செய்யப்பட்டதுடன், மத்திய அதிவேக வீதியின் மீரிகம – கடவத்தை பகுதியை நிர்மாணிப்பது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇