உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு மருத்துவமனையை இந்த வருடத்தின் இறுதியில் சீனா அறிமுகப்படுத்த உள்ளது.
ஒவ்வொரு நாளும் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி என்பது அபரிதமாக உள்ளது. ஒரு மனிதன் தன்னைப் போல, அச்சு அசல் மாறாத மற்றொரு மனிதனை சந்திப்பானா? என்பது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கேள்விக்குறியாக இருந்தது.
ஆனால் அது தற்போதைய டிஜிட்டல் காலக்கட்டத்தில் சாத்தியப்படுத்தப்பட்டு வருகிறது. ஏஐ தொழில்நுட்ப உதவியோடு மனிதர்களை போன்ற அதிநுட்ப ரோபோக்களை சர்வதேச நாடுகள் உருவாக்கி வருகின்றன.
இது நாளடைவில் வளர்ச்சியடைந்து, உண்மையான மனித முகம் கொண்ட ரோபோக்களை உருவாக்கும் சாத்தியக்கூறுகள் உருவாகி வருகின்றன. இந்நிலையில் ஒருபடி மேல் சென்று ஏஐ மருத்துவர்களை கொண்ட மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆம் அது உண்மைதான். ‘ஏஜெண்ட் மருத்துவமனை’ என்ற பெயரில் ஏஐ மருத்துவர்களை கொண்ட மருத்துவமனை ஒன்றை சீன ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
பெய்ஜிங்கில் அமைந்துள்ள சிங்குவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த ஏஐ மருத்துவர்களை கொண்ட மருத்துவமனையை உருவாக்கியுள்ளனர். உலகெங்கிலும் உள்ள சுகாதாரப் பாதுகாப்பில் புரட்சியை ஏற்படுத்தவும், கோடிக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றவும் இது வழிவகுக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த மருத்துவமனையில் 14 ஏஐ மருத்துவர்களும், 4 ஏஐ செவிலியர்களும் இருப்பர்.
அவர்களின் கூற்றுப்படி, இந்த மருத்துவர்கள் சில நாட்களிலேயே 10,000 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பர். மனித மருத்துவர்கள் இந்த எண்ணிக்கையை அடைய குறைந்தது 2 வருடங்கள் ஆகும் என தெரிவிக்கின்றனர். இது எந்த அளவிற்கு சாத்தியமாகும் என்பது தெரியவில்லை. ஆனால் இந்த கண்டுபிடிப்பு கோடிக்கணக்கான உயிர்களை காப்பாற்றும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த மருத்துவமனை செயல்படுத்தப்படும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇