டீவியேடட் நாஸல் செப்டம் எனும் மூக்கு தண்டு வளைவு பாதிப்பிற்குரிய சிகிச்சை…..
உலகளவில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் வயது வித்தியாசம் ஏதுமின்றி எதிர்பாராமல் ஏற்படும் விபத்தின் காரணமாக மூக்கு தண்டு வளைவு பாதிப்பு பெரும்பாலும் ஏற்படுகிறது என விவரிக்கும் வைத்தியர்கள்… இதற்கு உரிய தருணத்தில் முறையான சிகிச்சையை மேற்கொண்டால் பாதிப்பிலிருந்து முழுமையான நிவாரணத்தை பெறலாம் என்றும் தெரிவிக்கிறார்கள்.
பொதுவாக மூக்கு தண்டு வளைவு பெற்றிருந்தால்… அதனை யாரும் பாரிய அளவில் உணர்வதில்லை. ஆனால் அதே தருணத்தில் இவர்களுக்கு மூச்சுத் திணறல் அல்லது முகத்தின் ஒரு பக்கம் விவரிக்க இயலாத வலி உணர்வு , மூக்கடைப்பு , சைனசிட்டிஸ், குறட்டை போன்ற பாதிப்புகள் ஏற்படும் போது தான் இது தொடர்பாக வைத்தியரை சந்திப்போம். அதே தருணத்தில் மூக்கு தண்டு வளைவு ஏற்பட்டிருந்தால் வைத்தியர்கள் உடனடியாக சிகிச்சை அளிப்பதில்லை. இதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே அதற்கு சிகிச்சை அளிக்க தொடங்குகிறார்கள்.
சிலருக்கு பாரம்பரிய குறைபாட்டின் காரணமாகவும், பெரும்பாலானவர்களுக்கு எதிர்பாராமல் ஏற்படும் விபத்தில் மூக்கு பகுதியில் அடிபடுவதன் காரணமாகவும் இத்தகைய மூக்கு தண்டு வளைவு பாதிப்பு உண்டாகிறது.
மூக்கு தண்டு வளைவு ஏற்பட்டிருப்பதால்… மூக்கின் வழியாக காற்று உள்ளே சென்று வெளியே வரும் இயக்கத்தில் சிறிய அளவில் தடை ஏற்படக்கூடும்.
சிலருக்கு இதன் தீவிர தன்மையை அதிகரித்து ரத்தக் கசிவையும் உண்டாக்கலாம். சிலருக்கு மூக்கு தண்டு வளைவு பாதிப்பு மூக்கில் உள்ள திசுக்களின் ஏற்படும் வீக்கம் காரணமாகவும் உண்டாகும்.
மேலும் சிலருக்கு சளி அல்லது ஒவ்வாமை தொற்று பாதிப்பு ஏற்படும் போது இதனுடைய தாக்கம் அதிகமாக இருக்கும்.
இவர்களுக்கு வைத்தியர்கள் முறையாக பரிசோதனை செய்து பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து நவீன மருத்துவ தொழில்நுட்பங்களால் கண்டறியப்பட்டிருக்கும் பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகள் மூலம் முதன்மையான நிவாரணத்தை வழங்குகிறார்கள்.
வெகு சிலருக்கு மட்டும் இத்தகைய பாதிப்பின் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள மேலும் சில பரிசோதனைகளை செய்து, மூக்குத்தண்டு வளைவு பாதிப்பை சீரமைக்க பிரத்யேக சத்திர சிகிச்சையை மேற்கொண்டு முழுமையான நிவாரணத்தை அளிப்பார்கள்.
வைத்தியர் கிருஷ்ணகுமார்
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇