வடக்கு மற்றும் கிழக்கில் சீன அரசாங்கத்தின் நிதியுதவியில் பல்வேறு நன்கொடைத் திட்டங்களை சீன அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
இம் மாதம் 19 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென் ஹாங் ( Qi Zhenhong ) உள்ளிட்ட குழுவினர் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு ஆளுனர்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன் சீன அரசின் நிதியுதவியில் பல்வேறு நன்கொடைகளையும் வழங்கியுள்ளனர்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு இவ்வாண்டில் சீன அரசாங்கம் 1.5 பில்லியன் ரூபா மதிப்பீட்டில் வீடமைப்பு, மீன்பிடி உபகரணங்கள் மற்றும் அரிசி ஆகியவற்றை நன்கொடையாக வழங்கியது.
இதன் ஒரு கட்டமாக கடந்த 20 ஆம் திகதி வடமாகாணத்திற்காக 12 மில்லியன் ரூபா பெறுமதியான நன்கொடைத்திட்டங்களை வடமாகாண ஆளுநரிடம் சீன தூதுவர் உள்ளிட்ட குழுவினர் கையளித்தனர்.
அத்துடன் கிழக்கு மாகாணத்திற்காக 8 மில்லியன் ரூபா பெறுமதியான நன்கொடைத்திட்டங்களை கிழக்கு மாகாண ஆளுநரிடம் சீன தூதுவர் உள்ளிட்ட குழுவினர் கையளித்தனர்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் உள்ள களுவன்கேணி கிராமத்திற்கு விஜயம் செய்த சீன தூதுவர் உள்ளிட்ட குழுவினர், அக் கிராம மக்களுக்கான வீடுகளை நிர்மாணம் செய்வதற்கும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் 4 மில்லியன் ரூபா பெறுதியான நன்கொடைகளை வழங்கியுள்ளனர்.
“ கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் கிராமமான களுவன்கேணி கிராமத்திற்கு பல வருடங்களாக தொடர்ச்சியாக விஜயம் செய்து , அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல நன்கொடைகளை வழங்கியுள்ளமை உண்மையிலேயே மகிழ்ச்சியானது என்றும் அவர்களின் வாழ்க்கை தொடர்ந்து மேம்படுவதைக் கண்டு பெருமை அடைகிறேன் என்றும் சீனத் தூதுவர் குய் சென் ஹாங் ( Qi Zhenhong ) தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇