73 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 65சத வீதத்தை தாண்டியது!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கடும் மழை காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள 73 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 65 வீதத்தை தாண்டியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக, நாடளாவிய ரீதியில் உள்ள பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, நாட்டின் உள்ள 73 நீர்த்தேக்கங்களில் 23 நீர்த்தேக்கங்கள் மற்றும் பெரும்பாலானவைகளில் நடுத்தர அளவில் வான் கதவுகள் திறக்கப்பட்டு வருகின்றன.

அம்பாறை, அநுராதபுரம், பதுளை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு இதுவரை 50 வீதத்தை தாண்டியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஹம்பாந்தோட்டை, காலி, கண்டி, குருநாகல் மற்றும் மொனராகலை மாவட்டங்களில் 80% வீதத்திற்கும் அதிகமான நீர் கொள்ளளவு பதிவாகியுள்ளது.

பொலன்னறுவை மற்றும் புத்தளம் மாவட்டங்களின் நீர் கொள்ளளவு 70% ஆகவும், திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களின் நீர் கொள்ளளவு 45% ஆகவும் உள்ளது.

இதன் காரணமாக நாட்டின் 73 பிரதான குளங்களின் மொத்த நீர் கொள்ளளவானது 65 வீதத்தை தாண்டியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அனுராதபுரம் மாவட்டத்தின் ராஜாங்கனை ஏரியின் 6 வான்கதவுகள் இதுவரை திறக்கப்பட்டுள்ளதுடன் கலா ஏரிக்கு வினாடிக்கு 4,498 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ரூகம நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளும், பதுளை மாவட்டத்திலுள்ள தம்பராவ, அம்பேவெல மற்றும் சொரபொர ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் பந்தகிரிய, திஸ்ஸ ஏரி, வீரவில குளம், வெரகல மற்றும் யோத ஏரியும் திறந்து விடப்பட்டுள்ளதுடன், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் முருதாவெல நீர்த்தேக்கத்திலிருந்து 5 வான்கதவுகள் திறக்கப்பட்டு ஊறுபொக்கு ஓயாவிற்கு வினாடிக்கு 937 கன அடி வீதம் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் லுணுகம்வெஹர நீர்த்தேக்கத்தில் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி வினாடிக்கு 1,788 கன அடி நீர் கிரிந்தி ஓயாவிற்கு திறந்து விடப்படுவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலி மாவட்டத்தின் எல்லேவெல குளம், கெகுணுதுர குளம் தற்போது வடிந்து வருவதாகவும் மொனராகலை மாவட்டத்தின் எத்திமலே குளம், முதுகண்டிய மற்றும் ஹந்தபாங்கல நீர்த்தேக்கங்களும் வடிந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குருநாகல் மாவட்டத்திலுள்ள தீதுரு ஓயா நீர்த்தேக்கத்திலிருந்து 25.11.2024 அன்று வரை வினாடிக்கு 4,100 கன அடி வீதம் திறந்து விடப்படுவதாகவும், ஆனால் தற்போது 6 வான்கதவுகள் திறந்து வினாடிக்கு 13,700 கன அடி வீதம் தீதுரு ஓயாவிற்கு திறந்து விடப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குருநாகல் மாவட்டத்திலுள்ள மடியாவ குளத்தில் சிறிதளவு நீர் வடிந்து வருவதாகவும் புத்தளம் மாவட்டத்திலுள்ள தப்போவ குளத்தில் தற்போது இரண்டு வான் கதவுகளை திறந்து வினாடிக்கு 240 கன அடி வீதம் நன்னேரியா ஓயாவிற்கு விடப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள அங்கமுவ குளத்திலிருந்து தற்போது கலா ஓயாவுக்கு வினாடிக்கு 1,665 கன அடி வீதம் திறந்துவிடப்படுவதாகவும், துருவில ஏரியும் திறந்துவிடப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects