வட மாகாண ஆளுநரால் பவுசர் கையளிக்கும் நிகழ்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

தீவக மக்களுக்கு பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றைத் தீர்ப்பதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை விரைவில் நாம் முன்னெடுக்க இருக்கின்றோம். இது தொடர்பில் வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவனுடனும் கலந்துரையாடியிருக்கின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

பிரிட்டன் வாழ் புங்குடுதீவைச் சேர்ந்த நலன்விரும்பிகளால் , வட இலங்கை சர்வோதய குடிநீர் வழங்கல் திட்டத்துக்கு வெள்ளிரும்பிலான குடிதண்ணீர் பவுசர் கையளிக்கும் நிகழ்வு புங்குடுதீவு புஸ்பா மணி மண்டபத்தில் இடம்பெற்றது.

வடக்கு மாகாண ஆளுநரால், பவுசர் கையளிப்பு மேற்கொள்ளப்பட்டு உதவிய நலன்விரும்பிகளின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவுக்கல்லும் திரை நீக்கம் செய்யப்பட்டது.

இதன் பின்னர் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், குடிநீரின் தேவை இன்று தீவகப் பகுதியில் மாத்திரம் அல்ல யாழ்ப்பாண நகரப் பகுதியிலும் உணரப்பட்டுள்ளது. இன்று அங்கு குடிதண்ணீரின் தரம் மற்றும் அளவு தொடர்பில் பல பிரச்சினைகள் இருக்கின்றன. கடல் நீரை நன்னீராக்கி குடிநீர் விநியோகத்துக்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தாலும் வேறு குடிநீர் மூலங்களையும் கண்டறியவேண்டியவர்களாக நாங்கள் இருக்கின்றோம்.

தொண்டர் கந்தையா திருநாவுக்கரசு அவர்களின் எண்ணம் சிந்தனை நல்நோக்குடன் இருந்தமையால் அவர் அன்று ஆரம்பித்த வட இலங்கை சர்வோதய சங்கம் வியாபித்து விருட்சமாக வளர்ந்திருக்கின்றது. நாம் நல்ல எண்ணத்துடன் எதை ஆரம்பித்தாலும் அதை இறை சக்தியாவது வெற்றிகரமாக நடத்தி முடிக்கும்.

இந்த ஊர் மக்கள் புலம்பெயர்ந்து சென்றாலும் தமது சொந்த மண்ணை மறக்கவில்லை. அதனால்தான் அவர்கள் இன்றும் உங்களுக்கு உதவியைச் செய்கின்றார்கள். இவ்வாறு உதவி செய்ய முன்வந்த அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். இவ்வாறான உதவிகளை உரிய முறையில் நீங்கள் பயன்படுத்தி பலன்பெறவேண்டும் என ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.

இதேவேளை, புங்குடுதீவு பிரதேசத்தில் பொலிஸ் காவலரண் தேவை எனவும் ஏதாவது ஒரு வங்கி அமைக்கப்பட வேண்டும் எனவும் அந்தப் பிரதேச மக்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

நிகழ்வில் வட இலங்கை சர்வோதய சங்கத்தின் அறங்காவலர் செல்வி பொன் யமுனாதேவி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், மனவளக்கலை பேராசிரியர் அருள்நிதி சி.முருகானந்தவேள், வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், தீவகம் தெற்கு பிரதேச செயலர் க.சிவகரன், தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் தி.ஞானசுந்தரன், வேலணை பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி அ.ஜெயக்குமாரன் மற்றும் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects