பல்துறை சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் உலகின் மிக உயரிய விருதான `நோபல் பரிசு’, இந்த ஆண்டு வழக்கம்போல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நோபல் அகடமி வெளியிட்டிருக்கும் பட்டியலில் பலர் இடம்பெற்றிருக்கின்றனர்.
இதில், உடலியக்கவியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு, அமெரிக்க விஞ்ஞானிகள் விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
வழக்கத்திற்கு மாறான மைக்ரோ RNA-களின் ஒழுங்குமுறையால் புற்றுநோய், பிறவி காது கேளாமை மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படும் என்பதை முன்கூட்டியே அறிய முயலும் முயற்சியாக `மைக்ரோ RNA’ குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்ட இவர்கள், மரபணு வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தும் திறன் இல்லாவிட்டால், உயிரினத்தின் ஒவ்வொரு உயிரணுவும் ஒரே மாதிரியாக இருக்கும் என்பதால் உயிரினங்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த மைக்ரோ RNA குறித்து ஆய்வை மேற்கொண்டுள்ளனர் .
DNA மற்றும் RNA செயல்பாடுகள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் மட்டத்தை தாண்டி, COVID 19 தொற்றுக்கு பிறகு, சாதாரண பொதுமக்கள் மத்தியிலும் RNA-க்கள் குறித்து பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதே போன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு, செயற்கை நுண்ணறிவுத் துறையில் முக்கிய கட்டமைப்பான artificial neural networks என்று சொல்லப்படும் (செயற்கை நரம்பியல் வலைப்பின்னல்கள்) சார்ந்த கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஹாப்ஃபீல்ட் மற்றும் பிரிட்டனில் பிறந்து கனடாவில் பணியாற்றும் ஜாஃப்ரி ஹின்டன் ஆகியோருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது .
`இந்த இரு ஆராய்ச்சியளர்களும், இன்றைய இயந்திரக் கற்றல் (machine learning) தொழில்நுட்பத்துக்கு அடித்தளமாக இருக்கும் முறைகளை உருவாக்க இயற்பியல் கருவிகளைப் பயன்படுத்தியுள்ளனர்,” என்று சுவீடனின் அறிவியல் கழகம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
ஜாஃப்ரி ஹின்டனின் முந்தைய ஆராயச்சிகள் ‘ChatGPT’ போன்ற தற்போதைய செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் மற்றும் அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ளவும் ‘ஆழ்ந்த கற்றல்’ (deep learning) போன்றவற்றுக்கும் பயன்படுகிறது .
தரவுகள், படங்கள் அகியவற்றைச் சேமித்து வைத்து, அவற்றைத் தேவைக்கேற்ப மறுகட்டமைப்பு செய்யும் ஒரு ‘நினைவுக் கட்டமைப்பை’ ஜான் ஹாப்ஃபீல்ட் உருவாக்கினார்.
“செயற்கை நுண்ணறிவின் தந்தை” என்றழைக்கப்படும் ஜாஃப்ரி ஹிண்டன், கடந்த ஆண்டு கூகுள் நிறுவனத்திலிருந்து தனது பணியை ராஜினாமா செய்தார் என்பது கூடுதல் செய்தி .
புரதங்கள் பற்றிய ஆராய்ச்சிக்காக அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பேக்கர், ஜான் ஜம்பர், மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த டெமிஸ் ஹசாபிஸ் ஆகியோர் இந்த ஆண்டுக்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பெற்றுள்ளார்கள். இவர்களில் டெமிஸ் ஹசாபிஸ், செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனமான ‘கூகுள் டீப் மைண்ட்’-இன் இணை நிறுவனராவார்.
மனித உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான பங்கு வகிப்பது, உயிரணுக்களிலுள்ள புரதங்கள்தான். இதை மூலமாக வைத்து அமினோ அமிலங்களைப் பயன்படுத்தி புதிய வகை புரதத்தை வடிவமைத்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியரான டேவிட் பேக்கர்.
லண்டன் பல்கலைகழகத்தில் பேராசிரியராக உள்ள ஜான் ஜம்பர் மற்றும் டெமிஸ் ஹசாபிஸ் ஆகியோர் இணைந்து செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, ஏற்கெனவே அறிந்த புரதங்களின் வடிவமைப்புகளை கணித்து, ‘ஆல்பாஃபோல்ட்2’ என்ற கருவியை உருவாக்கினர். இந்த கருவி வேதியியல் துறையில் ‘முழுமையான புரட்சி’ செய்ததாகத் தேர்வுக் குழு குறிப்பிட்டுள்ளது.
இதே போன்று 2024 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு தென் கொரிய எழுத்தாளர், ஹான் காங்கிற்கு வழங்கப்படுகிறது. “வரலாற்று அதிர்ச்சிகளை எதிர்கொள்ளும் மற்றும் மனித வாழ்க்கையின் பலவீனத்தை வெளிப்படுத்தும் அவரது தீவிர கவிதை உரைநடைக்காக” இப் பெருமைமிகு விருதைப் பெறுகிறார் ஹான் காங்.
ஹான் காங் தமது பதிவுகளில், வரலாற்று அதிர்ச்சிகள் மற்றும் கண்ணுக்கு தெரியாத விதிகளின் தொகுப்புகளில் கவனம் செலுத்துவதோடு ஒவ்வொரு படைப்புகளிலும், மனித வாழ்க்கையின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறார். உடலுக்கும் ஆன்மாவுக்கும், உயிருள்ளவர்களுக்கும் இறந்தவர்களுக்கும் இடையிலான தொடர்புகள் பற்றிய தனித்துவமான விழிப்புணர்வை அவர் கொண்டுள்ளார். மேலும் அவரது கவிதை மற்றும் சோதனை பாணியில் சமகால உரைநடையில் ஒரு கண்டுபிடிப்பாளராக மாறியுள்ளார் என்று நோபல் அகடமி தமது பத்திரிகை குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇