சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு நாட்காட்டியின் பிரகாரம், இலங்கை தொடர்பான கலந்துரையாடல் இன்று 12.12.2023 இடம்பெறவுள்ளது.
அதன் முதல் மீளாய்வு இன்றைய தினம், நிறைவேற்று சபையில் பரிசீலிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, உத்தியோகபூர்வ கடன் வழங்கும் நாடுகள் அண்மையில் வழங்கிய உறுதியை அடுத்து இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் இரண்டாம் தவணைக் கொடுப்பனவை இந்த மாத இறுதிக்குள் இலங்கை எட்டும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்திருந்தது.
இலங்கை, சர்வதேச நாணய நிதியத்தினால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் சிலவற்றை மாத்திரமே பூர்த்தி செய்துள்ளது.
அத்துடன், பல மாற்றங்களையும் இலங்கை கோரியிருந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், பணவீக்கம் உட்பட சில இலக்குகளை இலங்கை அடைந்துள்ளது.
இந்தநிலையில், இலங்கையின் கோரிக்கை உள்ளிட்ட விடயங்களை ஆராய்ந்து சர்வதேச நாணய நிதியம் இன்று தமது தீர்மானத்தை அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
நாடு கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட நிலையில், அதிலிருந்து மீள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தை நாடியிருந்தது.
இதனபடிப்படையில், அதன் முதற் தவணை கடன் கடந்த மார்ச் மாதம் கிடைக்கப்பெற்றது.
இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் இரண்டாம் தவணைக்கடன் இலங்கைக்கு கிடைக்கப்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகள் சிலவற்றை இலங்கை நிறைவேற்ற தவறியது.
இதனால் இலங்கை குறிப்பிட்ட காலத்தில், நீடிக்கப்பட்ட நிதி வசதியின் இரண்டாம் தவணையை பெற தவறியிருந்தது.
இந்த நிலையில், இலங்கைக்கான இரண்டாம் தவணைக்கடன் வசதிக்கு சர்வதேச நாணய நிதியம் இந்த மாதம் அனுமதி வழங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇