தொழிற் பயிற்சிகளை வழங்குவதற்கு பல நிறுவனங்கள் இருந்தும் இளைஞர்களும், இளம்பெண்களும் திசைமாறிச் செல்வது வேதனையாக இருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
திறன் அபிவிருத்திக்கான யாழ். சர்வதேச கல்லூரியின் ஏற்பாட்டில் 9ஆவது ஆண்டாகவும் நடைபெறும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
‘யாழ்ப்பாண மாவட்ட சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் தி.தனஞ்சயன், கிளிநொச்சி மாவட்ட சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் ச.சசீபன்’ , கிளிநொச்சி மாவட்ட சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் தி.தனஞ்சயன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும், தேசிய பயிற்சி மற்றும் தொழில்துறை பயிற்சி அதிகார சபையின் யாழ். மாவட்ட முகாமையாளர் இ.திருமுருகன் சிறப்பு விருந்தினர்களாகவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
திறன் அபிவிருத்திக்கான யாழ். சர்வதேச கல்லூரியின் 5 கிளைகளில் கல்வி பயின்ற 368 பேருக்கு சான்றிதழ்களும், 71 பேருக்கு விருதுகளும் வழங்கப்பட்டன.
வடக்கு மாகாண ஆளுநர் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு தனது உரையில், இந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி வ.கஜேந்திரன் விடாமுயற்சியுடைய ஒருவர் என்றும், அவர் தலைமைத்துவத்தில் இந்த நிறுவனம் மிகப் பெரிய வளர்ச்சியடைந்துள்ளது எனவும் குறிப்பிட்டார். இந்த நிறுவனத்தை ஆரம்பித்து வைத்தவன் என்ற வகையில் இதன் வளர்ச்சியில் பெருமை அடைவதாகத் தெரிவித்த ஆளுநர், எங்கேயும் தலைமைத்துவம் சிறப்பாக இருந்தால் அந்த இடம் முன்னேறும் என்பதற்கு கஜேந்திரன் மிகப் பெரிய உதாரணம் என்றும் குறிப்பிட்டார்.
நாங்கள் நேரிய சிந்தனையுடன் எதனைத் தொடங்கினாலும் வெற்றியடைய முடியும். எங்களால் முடியாது என்று நினைத்து பயந்து கொண்டிருந்தாலோ, எதிர்மறையான சிந்தனையுடன் இருந்தாலோ வாழ்க்கையில் வெற்றியடைய முடியாது என ஆளுநர் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் போருக்கு முன்னர் இங்கு பல தொழிற்சாலைகள் இயங்கி பலருக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கியிருந்தன. இன்று அவை அழிவடைந்திருப்பதன் காரணமாக இளையோரிடத்தில் வேலை வாய்ப்பு தொடர்பான சிக்கல்கள் எழுந்திருக்கின்றன என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.
திறன் அபிவிருத்திக்கான யாழ். சர்வதேச கல்லூரியில் கல்வி கற்று வெளியேறும் ஒவ்வொருவரும் தொழிற்முயற்சியாளர்கள்தான் எனக் குறிப்பிட்ட ஆளுநர், நீங்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு பேருக்கு வேலை வாய்ப்புக்களை வழங்குகின்றீர்கள் என்பதில்தான் உங்களின் வெற்றி தங்கியிருக்கின்றது எனவும் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்துக்கு கணிசமான பங்களிப்பை வழங்குவது சிறு தொழில் முயற்சியாளர்கள்தான் எனக் குறிப்பிட்ட ஆளுநர், வடக்கு மாகாணத்தின் முன்னேற்றத்துக்கு உங்களின் பங்களிப்பு அவசியம் எனவும் சுட்டிக்காட்டினார்.
முன்னேறும்போது தடைகள், சவால்கள் வரத்தான் செய்யும் எனக் குறிப்பிட்ட ஆளுநர், அதை எப்படி வெற்றிகரமாக நாம் தாண்டி முன்னேறுகின்றோம் என்பதில்தான் எங்களின் ஆளுமையும் திறமையும் இருக்கின்றது எனத் தெரிவித்தார்.
இளைஞர்கள் மாத்திரமல்ல இளம்பெண்களும் இப்போது தடுமாறத் தொடங்கியிருக்கின்றமையை அறியக்கூடியதாக உள்ளதாகக் குறிப்பிட்ட ஆளுநர், இளையோருக்கான தொழிற்பயிற்சிகளை வழங்க பல்வேறு நிறுவனங்கள் இருந்தும் அவர்களின் இந்தத் தடுமாற்றம் வேதனையளிப்பதாகத் தெரிவித்தார்.
இதை மாற்றியமைப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், இளைய சமூகத்தின் ஒத்துழைப்பும் அதற்குத் தேவை என ஆளுநர் தனது உரையில் வலியுறுத்தினார்.




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










