மட்டக்களப்பு செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையில், மதுபாவனையில் அடிமையானவர்களுக்கு முழுமையான விடுதலை வழங்குவதற்காக புதிய புனர்வாழ்வு மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த மையம், சுகாதார அமைச்சின் நிதி உதவியுடன் செயல்படுவதுடன், மதுப்பழக்கத்திலிருந்து மீள உதவுவதற்கான மருத்துவ மற்றும் உளவியல் ஆலோசனைகளை வழங்குகின்றது.
இந்த மையம், மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு உளவியல் மற்றும் மருத்துவ சிகிச்சை வழங்குவதன் மூலம் அவர்களை சமுதாயத்தில் இயல்பாக வாழ வைக்கும் முயற்சியாக அமைந்துள்ளது. இதன்மூலம், பாதிக்கப்பட்டவர்களின் வாழ்கையில் ஒரு புதிய மாற்றம் ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் 17.03.2025 அன்று நடைபெற்ற திறப்பு விழாவில் தேசிய உளநலப் பணிப்பாளர் வைத்தியர் எல்.ந.மகோதரட்ன, சமூக நல ஆலோசகர் வைத்தியர் யமுனா எல்லாவேலா, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் கலாரஞ்சினி கணேசலிங்கம், கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஜி. சுகுணன், மட்டக்களப்பு உளநல வைத்திய நிபுணர்கள் வைத்தியர் ரீ.கடம்பநாதன், வைத்தியர் ஆர். கமல்ராஜ் மற்றும் பிராந்திய வைத்திய அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
“உவகை” நல்வாழ்வு மையம் என பெயரிடப்பட்ட இந்த புனர்வாழ்வு மையம், மட்டக்களப்பில் மதுபாவனையில் அடிமையானவர்களுக்கு ஒரு புதிய எதிர்காலத்தை ஏற்படுத்துவதுடன் இந்த மையம், சமூக மறுவாழ்வின் முக்கியத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், மதுபாவனையில் சிக்கியவர்களுக்கு சிகிச்சைகள், ஆலோசனைகள் மற்றும் குடும்ப ஆதரவு வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.














இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










