மட்டக்களப்பு மாவட்டத்தில் நவீன முறையிலான விவசாய செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல் கூட்டம், 21.03.2025 அன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில், புதிய மாவட்ட செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடல் கூட்டம், மாவட்ட செயலகம் மற்றும் விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில், கொமர்சல் வங்கியின் அனுசரனையில் நடைபெற்றது. இந்நிகழ்வு, மாவட்டத்தில் புதிய தொழில்நுட்பத்தை நடைமுறையில் அமுல்படுத்துவதற்கான ஆரம்ப கட்ட கலந்துரையாடலாக அமைந்தது.
அரசு விவசாய கொள்கையின் அடிப்படையில், நவீன முறையிலான விவசாய செய்கை மேற்கொண்டு சிறந்த விளைச்சல்களை பெற, நவீன தொழில்நுட்ப இயந்திரங்களின் பங்களிப்பு, ஆளில்லா விமானங்களை (Drone) பயன்படுத்தல், செயற்கை நுண்ணறிவு (AI), பரிசூட் முறையில் நாற்றுகளை நடுதல் போன்ற பல்வேறு கருவிகளையும், தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விவசாய செயற்பாடுகளை முன்னெடுத்தல் குறித்து துறைசார்ந்த நிபுணர்களுடன் கலந்துரையாடப்பட்டன.
இந்த திட்டத்தின் ஆரம்ப கட்டமாக, வவுனதீவு பிரதேசத்தில் நான்கு விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டு, இருபது ஏக்கர் நெற்காணிகளில் முன்னோடி விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மேலும், கிழக்கு பல்கலைக்கழகத்தினால் இருபது விவசாயம் மேற்கொள்ளும் இளைஞர்களுக்கு புதிய தொழில்நுட்ப அறிவுகள் வழங்கப்படவுள்ளன.
இந்நிகழ்வில், நவீன விவசாய முறையினால் அறுவடை செய்யும் விளைநிலங்களில் பெற்ற விளைச்சல்களும், செலவுகளும் பற்றிய ஆய்வுகள், அளிக்கப்படுவதாகவும் குறிப்பிடத்தக்கது.
இத் திட்டத்தில், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், மாவட்ட விவசாய பணிப்பாளர் எம். எப். ஏ. ஸனிர், மாவட்ட விவசாய திணைக்கள விரிவாக்க பிரிவு பிரதி பணிப்பாளர் எம். பரமேஸ்வரன், விவசாய போதனா ஆசிரியர்கள், கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி ரி. கிரிதரன், துறைசார்ந்த நிபுணர்கள், கொமர்சல் வங்கி உயர் அதிகாரிகள் மற்றும் விவசாய அமைப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.









இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










