மதகு வழங்கும் ஆரோக்கிய தகவல்!

Tamil
 – 
ta

வாட்டி வதைக்கும் வெயில் ; சரும நோய்களுக்கான தீர்வுகள்…..

கடந்த சில நாட்களாகவே, வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்த வண்ணமேயுள்ளது. அதிகபட்ச வியர்வையின் காரணமாக, தோல் சம்பந்தப்பட்ட நோய்களும் அதிகரித்தபடியுள்ளன. குறிப்பாக அரிப்பு, படர்தாமரை, சூட்டு கொப்பளங்கள் என நாளுக்கு நாள் ஏதோவொரு பாதிப்புகள் ஏற்பட்ட வண்ணமுள்ளன. ஆகவே இவற்றுக்கான தீர்வுகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

ஆடைகளில் கவனம் வேண்டும்

“கோடைக்காலத்தில் வியர்வை அதிகம் சுரக்கும். அதனால் எண்ணெய்ப்பசையும் அதிகமாகும். வியர்க்குரு ஏற்படும். ஆகவே, இந்த நாட்களில் இரு வேளை குளிப்பது அவசியம். இரண்டு வேளையும் குளிர்ந்த நீரில்தான் குளிக்க வேண்டுமே தவிர வெந்நீரில் குளிக்கக் கூடாது. பெண்கள் லெக்கிங்ஸ் மற்றும் ஆண்கள் ‘டென்னிம்’ அணிவதைத் தவிர்க்க வேண்டும். தூய்மையான பருத்தி வகை ஆடைகள் அணிவது சிறந்தது. ஏனெனில், பருத்திக்குத் தான் வியர்வையை உறிஞ்சும் தன்மை இருக்கிறது.

சன் ஸ்கிரீன் பாவணை

சருமத்துக்கு சன் ஸ்கிரீன் உபயோகிக்க வேண்டும். எஸ்.பி.எஃப் 30க்கு மேல் உள்ள சன் ஸ்கிரீனாக பார்த்து வாங்க வேண்டும். பரு இருந்தால் கிரீம் வடிவிலான சன் ஸ்கிரீனைவிட ஜெல் வடிவிலான சன் ஸ்கிரீன் பயன் படுத்த வேண்டும்.

இருப்பினும், சன் ஸ்கிரீன் போட்டுவிட்டால் எப்படி வேண்டுமானாலும் வெயிலில் உலவலாம் என்று நினைத்து விடக்கூடாது. சன் ஸ்கிரீன் என்பது 30 சதவிகிதம் மட்டுமே பாதுகாப்பு தரும் என்பதால் வெயிலில் செல்கிறவர்கள் கையுறை அணிய வேண்டும். முகத்தில் கண் தவிர மற்ற பகுதிகளிலெல்லாம், வெயில்படாமல் துணியால் சுற்றிச் செல்வது நல்லது. வெயிலில் வெளியே தெரியும் கைகள் மற்றும் முகத்தை ஏதாவது வகையில் மூடிக்கொள்வதன் வழியே சூரியனின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.

படர்தாமரை பாதிப்பு

வெயில் காலத்தில் படர்தாமரை அதிகமாகும். அக்குள் மற்றும் தொடையிடுக்குகளில் பூஞ்சைத்தொற்று அதிகமாக ஏற்படும். அந்த இடங்களில் சுத்தமான பருத்தி துணியால் ஈரம் இல்லாமல் துடைத்துவிட வேண்டும். முக்கியமாக, மென்மையான பருத்தி டவலையே பயன்படுத்த வேண்டும். அவசரமாகக் குளித்து விட்டுக் கிளம்புபவர்கள் நன்றாகத் துடைக்காமல் ஈரத்திலேயே ஆடைகளை அணிவதுண்டு. இந்தப் பழக்கத்தைக் கைவிட வேண்டும். உடலில் ஈரம் இல்லாது உலர்ந்த பிறகுதான் உடை மாற்ற வேண்டும்.

மேலும், சப்பாத்து பயன்படுத்துகிறவர்கள் தினமும், காலுறையை துவைத்தே பயன்படுத்த வேண்டும். படர்தாமரை இருக்கிறவர்கள் குளிக்காமல் இறுக்கமான ஆடைகளை அணியும்போது வியர்வை பட்டு அது மேலும் அதிகமாகி விடும். அதேபோல சொறிவதன் மூலமும் அது பெருகும்.

அதேசமயம், கிருமிநாசினிகளைப் பயன்படுத்தி சுத்தம் செய்வதும் தவறுதான். சொறிவதன் மூலம் அதிகம் பரவும் என்பதால் அதற்கான பவுடர் மற்றும் லோஷன் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். அதற்கும் கேட்கவில்லையென்றால் சரும மருத்துவரை அணுக வேண்டும்.

வெயில் நாட்களில் அரிப்பும் பலருக்கு பிரச்சினையாக இருக்கும். அரிப்பிலேயே பல வகைகள் இருக்கின்றன. ‘பொலிமோர்பிக் லைட் எரப்ஷன்’ (Polymorphic light eruption) என்கிற ஒவ்வாமை கோடைக்காலத்தில் அதிகம் ஏற்படும். சிறு வயதிலிருந்தே வெயில்பட்டு வளர்வதால் முகம், கழுத்து, கைகள் உள்ளிட்டவை வெயிலைத் தாங்கும் தன்மை கொண்டிருக்கும். அந்தத் தன்மை இல்லாமல் போவதே இப்பிரச்சினைக்கான காரணம். இந்த ஒவ்வாமை உள்ளவர்களால் ஐந்து நிமிடங்கள்கூட வெயிலில் நிற்க முடியாது. அவர்கள் வெயிலில் நடமாடுவதை முழுவதுமே தவிர்க்க வேண்டும். குறிப்பாக காலை 8 மணியில் இருந்து மாலை 4 மணி வரையிலான வெயிலை உள்வாங்கவே கூடாது. சூரிய ஒளி மிகவும் நல்லது, அதிலிருந்துதான் விட்டமின் ‘டி’ கிடைக்கிறது என்று சொல்வதெல்லாம் காலை இளம் வெயிலுக்குத்தான் பொருந்தும். உச்சிவெயிலில் நின்று கொண்டு சூரிய ஒளியை உள்வாங்குவதால் பாதிப்புகள்தான் ஏற்படும். எனவே, காலை 8 மணி வரை அல்லது மாலை 4 மணிக்கு மேல் வெயிலில் நிற்பதுதான் நல்லது.

எண்ணெய்ப்பசையும் முடி உதிர்தலும்

கோடையில் வியர்வை, எண்ணெய்ப் பசையின் காரணமாக முடி அதிகம் கொட்டும். தினசரி தலைக்குக் குளிப்பது நல்லது. இல்லையென்றால் வாரத்துக்கு மூன்று முறையேனும் தலைக்குக் குளிக்க வேண்டும். தலையின் ஈரம் காய நேரமெடுக்கும் என தினசரி தலைக் குளியலைத் தவிர்க்க நினைப்போர், தினசரி அரை மணி நேரம் முன்னதாகவே தயாராகிக் குளித்துவிட்டு தலையைக் காய வைக்க அரை மணி நேரத்தை ஒதுக்கலாம். இதனால் தலையில் உள்ள எண்ணெய்ப்பசை நீங்கி விடும்.

சூட்டுக் கொப்பளம்

வெயில் காலத்தில் சிலருக்கு சூட்டு கொப்பளங்கள் ஏற்படும். இது உடல் சூடாவதால் ஏற்படுவதல்ல. கோடைக்காலத் தொற்றின் காரணமாக ஏற்படுவது. வெயில் காலத்தில் வருவதால் அதனை சூட்டுக்கட்டி என்கிறார்கள். இதற்கு, நீர்ச்சத்துள்ள பழங்களை எடுத்துக் கொள்வதன் மூலம் தீர்வு காணமுடியும்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects