தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக இன்று (11.04.2025) முதல் விசேட புகையிரத சேவைகள் இயக்கப்படும் என்று இலங்கை புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதற்கிணங்க, 10 விசேட புகையிரதங்கள் சேவையில் இணைக்கப்படும் என்று புகையிரதத் திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார். 

அதன்பிரகாரம், இன்று இரவு 7.30 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு ஒரு விசேட புகையிரதம் இயக்கப்படும் அதே நேரத்தில் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கும் புகையிரதம் ஒன்று இயக்கப்படவுள்ளது. 

மேலும், இன்று இரவு 7.20 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து காலிக்கு ஒரு விசேட புகையிரதம் இயக்கப்படும் அதே நேரத்தில் காலியில் இருந்து கொழும்பு கோட்டைக்கு புகையிரதம் ஒன்று இயக்கப்படவுள்ளது. 

மேலும், இன்று காலை கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கு விசேட புகையிரதம் ஒன்று பயணித்ததுடன், அந்தபுகையிரதம் மீண்டும் எதிர்வரும் 18 ஆம் திகதி திரும்ப திட்டமிடப்பட்டுள்ளது. 

அதன்படி, இந்த 10 விசேட ரயில்கள் ஊடாக புத்தாண்டு பருவம் மற்றும் நீண்ட வார இறுதி விடுமுறை நாட்களில் 31 பயணங்களை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக புகையிரதத் திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர மேலும் குறிப்பிட்டார். 

இதற்கிடையில், சொந்த ஊர்களுக்கு பயணிக்கும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான பேருந்துகளை இன்றைய தினமும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் சேவை மேற்பார்வை பணிப்பாளர் ஷெரீன் அதுக்கோரல தெரிவித்துள்ளார். 

மேலும், பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பி.எச்.ஆர்.டி. சந்திரசிறி குறிப்பிட்டுள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects