சர்வதேச சுற்றுலா தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகம் நடாத்தும் கடற்கரை கால்ப்பந்தாட்ட சுற்றுப்போட்டி நேற்று (28) திகதி கல்லடி கடற்கரையில் மிகச்சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை மேம்பாடு, போதையற்ற சமூகத்தை உருவாக்கல் , கரையோர சுத்தம் பேணல், சுய தொழிலை முன்னேற்றுதல் (உள்ளூர் உற்பத்தியாளர்கள்) ஆகிய சமூக நல இலக்குகளை நோக்கிய பார்வையில் மட்டக்களப்பு மாவாட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த் தலைமையில் இடம்பெற்று வருகின்ற நிகழ்வில் முதல் நிகழ்வாக பிரதம அதிதியாக கலந்துகொண்ட மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா உள்ளிட்ட அதிதிகள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து தேசிய கொடி ஏற்றப்பட்டு, உள்ளூர் உற்பத்தியாளர்களினால் உற்பத்தி செய்யப்பட்ட பாரம்பரிய உணவு கூடங்கள் பிரதம அதிதி உள்ளிட்ட அதிதிகளினால் திறந்துவைக்கப்பட்டதுடன், உணவுக் கூடங்களை அதிதிகள் பார்வையிட்டிருந்தனர்.
நடன கலைஞர்களின் கண்கவர் வரவேற்பு நடனம் நிகழ்த்தப்பட்டு, கடற்கரை கால்ப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் முதல் போட்டியில் பங்கேற்கவுள்ள இரண்டு அணி வீரர்களையும் அதிதிகளுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து போட்டிகள் பிரதம அதிதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 23 ஆண்கள் அணியினரும் 4 பெண்கள் அணியினரும் கலந்துகொள்ளவுள்ள இச்சுற்றுப்போட்டியானது 28,29 ஆகிய இரண்டு நாட்களை கொண்ட போட்டிகளாக இடம்பெறவுள்ளது.
நேற்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்ட சுற்றுப் போட்டியின் முதலாவது போட்டியில் கோல்பீஸ் அணியிரும், கர்ப்பளா இஸ்டார் அணியினரும் போட்டியிட்டிருந்தனர்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட காற்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் மா.உதயகுமார் சிறப்பு அதிதியாகவும், மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பியந்த பண்டார, 231 வது படைப்பிரிவின் இராணுவ அதிகாரி தம்மிக்க உள்ளிட்ட மாவட்ட செயலக உயரதிகாரிகள், மாவட்ட செயலக விளையாட்டு உத்தியோகத்தர், விளையாட்டு உத்தியோகத்தர்கள், சுற்றுலாத்துறை அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.
இந் நிகழ்வின் போது கிழக்கு மாகாணத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பிரபலப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை டைவ் ஈஸ்ட் நிறுவனத்தினர் காட்சிபடுத்தியிருந்ததுடன், மட்டக்களப்பின் வரலாற்றில் முதல்தடவையாக நடாத்தப்படும் பெண்களுக்கான கடற்கரை உதைப்பந்தாட்ட போட்டியாக இச்சுற்றுப்போட்டி அமைந்துள்ளமை விசேடம்சமாகும்.