அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் இரண்டாம் கட்ட நிவாரணத்துக்காக விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
அஸ்வெசும பயனாளிகளின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து மாவட்ட செயலாளர் அலுவலக அதிகாரிகளால் ஆராயப்படுமென சமூக நலன்புரி நன்மைகள் சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினர் கமல் பத்மசிறி குறிப்பிட்டார்.
தற்போதுள்ள பிரச்சினைகளை மையப்படுத்தி தீர்வு காண்பதற்காக நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ள விசேட வாரத்தின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென அவர் தெரிவித்தார்.
ஆட்பதிவு திணைக்களம், வங்கி உள்ளிட்ட பயனாளிகளின் பல்வேறு பிரச்சினைகள் காணப்படும் இடங்களுக்கு அலுவலர்கள் அனுப்பி வைக்கப்படுவார்களெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்வெசும நலன்புரி திட்டத்தை விரிவாக்கவும் தற்போது காணப்படும் பிரச்சினைகளை தீர்க்கவும் விசேட வாரத்தை நடைமுறைப்படுத்த நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன் அடிப்படையில் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை இந்த விசேட வாரம் நடைமுறைப்படுத்தப்படுமென அந்த அமைச்சு கூறியுள்ளது.
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு கண்டு, தாமதமின்றி தகுதியான பயனாளிகளுக்கு பலன்கள் வழங்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த விசேட வாரம் அமுல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇