அண்மைய மாதங்களில் இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் சர்வதேச நாணய நிதியம் ஒப்புக்கொண்டுள்ளது.
மிகவும் கடினமான மற்றும் மிகவும் தேவையான சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதில் இலங்கை பாராட்டத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்று, சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத் துறையின் பணிப்பாளர் ஜூலி கோஷேக் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சிகள் உண்மையில் பலனளிக்கத் தொடங்கியுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் வலுவான மீட்சி, குறைந்த பணவீக்கம், அதிகரித்து வரும் சர்வதேச இருப்புக்கள், மேம்பட்ட நிதி வருமான வசூல் மற்றும் கிட்டத்தட்ட முடிக்கப்பட்ட கடன் மறுசீரமைப்பு செயல்முறை ஆகிய பல முக்கிய குறிகாட்டிகளை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த முன்னேற்றங்கள், பொருளாதார நெருக்கடியின் உச்சத்திலிருந்து நாடு அடைந்த மிகப்பெரிய முன்னேற்றம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், பயணம் இன்னும் முடிவடையவில்லை என்று சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத் துறையின் பணிப்பாளர் ஜூலி கோஷேக் வலியுறுத்தியுள்ளார்.
கட்டமைப்பு ரீதியிலான சீர்திருத்தங்களுக்கான தொடர்ச்சியான உறுதிப்பாட்டின் முக்கியத்துவத்தையும் அவர் இதன்போது கோடிட்டுக் காட்டியுள்ளார்.
இந்த நடவடிக்கைகள், தமது நிர்வாக சபையினால் மதிப்பாய்வு செய்யப்பட்டதும், இலங்கைக்கு சுமார் 334 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி கிடைக்கும்.
இந்த நிலையில், நிர்வாக சபையின் முடிவுக்கான சரியான திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், அது சரியான நேரத்தில் பகிரங்கப்படுத்தப்படும் என்று, சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத் துறையின் பணிப்பாளர் ஜூலி கோஷேக் உறுதிப்படுத்தினார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










