மொனராகலை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மொனராகலை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி வலியுறுத்தல் மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களில் ஏற்படும் தாமதங்களைத் தடுத்து, அவற்றின் நன்மைகளை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மக்களுக்கு வழங்குவது, மாவட்டத்திலுள்ள அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும், ஒரு அபிவிருத்தித் திட்டம் ஆரம்பிக்கப்படும்போது, ​​அது நிறைவடையும் வரை இலக்கு மயப்பட்ட திட்டத்தை அவர்கள் வைத்திருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

கடந்த காலங்களில் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை உரிய நேரத்தில் நிறைவு செய்யத் தவறியதாலும்,அவற்றின் திட்டக் காலங்களை நீடித்து, மதிப்பிடப்பட்ட செலவை அதிகரித்ததால், அந்த திட்டங்களின் நன்மைகளையும் முதலீடு செய்த நிதியின் பிரதிபலன்களையும் நாடு இழந்துள்ளது என்று வலியுறுத்திய ஜனாதிபதி, இந்த ஆண்டு முதல் ஆரம்பிக்கப்படும் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் உரிய நேரத்தில் நிறைவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மொனராகலை மாவட்ட செயலகத்தில் இன்று (06) பிற்பகல் நடைபெற்ற மொனராகலை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

மொனராகலை மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டுக்காக பல்வேறு அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களால் செயல்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் தேவைகள் குறித்தும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.

மக்களுக்கு அவசியமான அபிவிருத்தித் திட்டங்களுக்கு எந்த நேரத்திலும் நிதி ஒதுக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, திறைசேரியின் நிதி கிராமங்களுக்குச் செல்ல வேண்டுமாயின் கிராமப்புற அபிவிருத்தித் திட்டங்கள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

கொடியாகல மற்றும் கெபிலித்த வனப்பகுதிகளின் எல்லை நிர்ணயம் காரணமாக விவசாய நிலங்களை இழந்த விவசாயிகளின் பிரச்சினை குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், விவசாயிகளின் விவசாய நிலங்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முறையான பொறிமுறையை வகுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரச நிறுவனங்களில் நிலவும் வெற்றிடங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், இந்த ஆண்டு புதிதாக 62,000 பேரை அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், தேவைக்கேற்ப இந்த எண்ணிக்கை ஒரு இலட்சமாக அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்த ஜனாதிபதி, அதற்கேற்ப இந்த வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், அரச சேவையை நவீனமயப்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும், உள்ளூராட்சி நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கும் அரச சேவையை நவீனமயமாக்குவதற்கும் இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இன்றைய பிரச்சினை அரச சேவை ஒரு சுமையாக இருப்பது அல்ல என்றும், மாறாக அரச சேவையை செயற்படுத்துவற்கான செலவு அதிகமாக உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

பிரதேச சபைகளுக்குத் தேவையான உபகரணங்கள், இயந்திரங்களை வழங்குவதற்கும், உள்ளூராட்சி நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கும் எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

சில நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு எவ்வளவு பணம் செலவிடப்பட்டாலும், அந்தத் திட்டங்கள் நீண்ட காலமாக நிறைவு செய்யப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பாரிய அளவிலான நீர்ப்பாசனத் திட்டங்கள் குறித்து மீளாய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் இங்கு சுட்டிக்காட்டினார்.

அரச நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் பாரிய அளவிலான நிர்மாணத் திட்டங்கள் குறித்து மீண்டும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், அந்தத் திட்டங்கள் உண்மையிலேயே அவசியமா என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, நீண்ட காலமாக நிறைவு செய்யப்படாத அரசாங்க நிர்மாணத் திட்டங்களின் தேவையை அடையாளம் கண்டு, அதற்கு மாற்று முன்மொழிவுகளை முன்வைக்குமாறும் பணிப்புரை விடுத்தார்.

மேலும், அபிவிருத்தித் திட்டங்களைச் செயல்படுத்தும்போது சமூக அடிப்படையிலான சங்கங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கக்கூடிய எல்லையை அதிகரிக்க அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், கிராமப்புற அபிவிருத்தியை விரைவுபடுத்துவதே இதன் நோக்கம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மொனராகலை மாவட்டத்திற்கு நகர சபை ஒன்று இல்லாமை, செவனகல பிரதேச செயலாளர் பிரிவுக்கு பிரதேச சபை ஒன்றை வழங்குவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், சியம்பலாண்டுவ பிரதேச செயலாளர் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட சூரிய சக்தி திட்டத்தால் காணிகளை இழந்த விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்க தலையிடுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

மேலும், புத்தள கைத்தொழில் வலயத்தில் குத்தகைப் பத்திரங்களை வழங்குவதன் முன்னேற்றம் குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டதுடன், மாவட்டத்தில் வீதிகள் மற்றும் பாலங்களை அபிவிருத்தி செய்தல், தலசீமியா நோயாளிகளுக்கான உள்ளக சிகிச்சைப் பிரிவுக்கான கட்டிட நிர்மாணம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி கபில ஜயசேகர, வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன, பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் அகலகட, எச்.எம். தர்மசேன, ருவன் விஜேவீர, சரத் குமார உள்ளிட்ட பிரதேச அரசியல் பிரதிநிதிகள், மொனராகலை மாவட்ட செயலாளர் எம்.எம். விஜேநாயக்க மற்றும் மாவட்டத்தின் அரச அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects