மட்டக்களப்பில் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் பராமரிப்பு நிலையம் ஒன்று சென் மேரிஸ் மோன்டசோரி ஹவுஸ் பொறுப்பதிகாரி திருமதி ரஜினி பிரான்சிஸ் தலைமையில் 21.11.2023 அன்று அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் முதலாம் செயலாளர் சோபி வில்கின்சனினால் திறந்துவைக்கப்பட்டது.
இல. 9, பண்டிங்ஸ் ஒழுங்கை, மட்டக்களப்பு எனும் முகவரியில் உள்ள சர்வோதயா மாவட்ட நிலையத்தில் திறந்து வைக்கப்பட்ட இக் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் பராமரிப்பு நிலையம் “சென் மேரிஸ் மோன்டசோரி ஹவுஸ்” இனால் நிர்வகிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், சர்வோதயா நிறுவனத்தின் தலைவர் கலாநிதி. வின்யா ஆரியரத்ன, கொமர்சல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் சனத் மானதுங்க, சர்வதேச நிதி நிறுவனத்தின் இலங்கை நாட்டுக்கான முகாமையாளர் அலிஜன்ரொ, சர்வோதய மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் வேனுஸ்ரீ புவனேந்திரராஜா உள்ளிட்ட சர்வோதயம் மற்றும் சென் மேரிஸ் மோன்டேசரி ஹவுஸ் குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தின் உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் பராமரிப்பு நிலையத்தின் தேவை மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வருவதாகவும், இன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த நிலையம் வேலைக்குச் செல்லும் பெற்றோர் தமது குழந்தைகளை பாதுகாப்பாக விட்டுச் செல்வதற்கான நம்பிக்கையான நிலையமாகச் செயற்படுமென தாம் நம்புவதாகவும் இந்த சவால்மிக்க பணியை முன்னெடுத்துள்ள அனைவரையும் பாராட்டுவதாகவும் சோபி வில்கின்சன் தனதுரையில் தெரிவித்தார்.
இப் பராமரிப்பு நிலையத்தில் ஆறு மாதக் குழந்தைகள் முதல் 10 வயது சிறுவர்கள் வரை பகல் நேரங்களில் பராமரிப்பு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களின் விளையாட்டுகள் மற்றும் தொடர்பாடலை விருத்தி செய்வதற்கான பல்வேறு வசதிகள் காணப்படுவதாகவும் இதன் இணைப்பாளர் வேனுஸ்ரீ புவனேந்திரராஜா மதகு ஊடகத்திற்குத் தெரிவித்தார்.