நமது வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதியை நாம் படுக்கையிலேயே கழிக்கிறோம். ஆனால், நாம் மிகவும் நிம்மதியாக உணரும் அப் படுக்கை, கோடிக்கணக்கான பக்டீரியாக்கள், பூஞ்சைகள் மற்றும் வைரஸ்களின் கூடாரமாக இருக்கக்கூடும் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
நாம் தினமும் சுமார் 500 மில்லியன் தோல் செல்களை உதிர்க்கிறோம். இவற்றுடன் நமது வியர்வை, உமிழ்நீர் மற்றும் உணவுத் துணிக்கைகள் சேரும்போது, அவை நுண் கிருமிகளுக்கு ஒரு ‘விருந்து’ போல அமைகின்றன.
இவை மனித தோல் செல்களை உண்டு வாழ்கின்றன. இவற்றின் கழிவுகள் ஒவ்வாமை, ஆஸ்துமா மற்றும் எக்ஸிமா போன்ற தோல் நோய்களைத் தூண்டுகின்றன.
ஆய்வுகளின்படி, ஒரு வாரம் துவைக்கப்படாத தலையணை உறையில், ஒரு கழிப்பறை இருக்கையை விட 17,000 மடங்கு அதிக பக்டீரியாக்கள் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
பக்டீரியாக்கள் தோல் தொற்று, நிமோனியா மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தக்கூடும்.
விஞ்ஞானி டேவிட் டென்னிங் நடத்திய ஆய்வில், பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படும் தலையணைகளில் கோடிக்கணக்கான பூஞ்சை துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக “Aspergillus fumigatus” என்ற பூஞ்சை மண்ணில் காணப்படுவதைப் போலவே தலையணைகளிலும் செழித்து வளர்கிறது.
நமது தலைப்பகுதியிலிருந்து வெளியேறும் வியர்வை (ஈரப்பதம்), தூசிப் பூச்சிகளின் கழிவுகள் (உணவு), நமது உடல் வெப்பநிலை என்பவற்றால் இவை பெருகுகின்றன.
இந்த பூஞ்சை துகள்கள் ஆஸ்துமா, சைனஸ் மற்றும் நுரையீரல் நோய் உள்ளவர்களுக்குப் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு இது உயிருக்கு ஆபத்தான தொற்றுக்களைக் கூட உண்டாக்கலாம்.
இவற்றைத் தவிர்ப்பதற்கு, படுக்கை விரிப்புகளை வாரத்திற்கு ஒருமுறை அதிக வெப்பநிலையில் துவைக்க வேண்டும்.
இது கிருமிகளை அழிக்க உதவும். ஆரோக்கியமானவர்கள் குறைந்தது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய தலையணைகளை வாங்க வேண்டும்.
ஆஸ்துமா அல்லது நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள் 3 முதல் 6 மாதங்களுக்கு ஒருமுறை தலையணைகளை மாற்ற வேண்டும். படுக்கைக்குச் செல்லும் முன் குளிப்பது, அழுக்கு காலுறைகளைத் தவிர்ப்பது மற்றும் மேக்கப் கலைத்துவிட்டு உறங்குவது கிருமிகள் பெருகுவதைக் குறைக்கும்.
படுக்கையில் அமர்ந்து உணவு உண்பதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு உண்டால், விரிப்புகளை வாரத்திற்கு ஒருமுறைக்கும் மேலாகத் துவைக்க வேண்டியது அவசியம்.
நாய் அல்லது பூனைகளை படுக்கையில் அனுமதிப்பது பக்டீரியா மற்றும் பூஞ்சைகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










