புகையிரத கட்டுப்பாட்டாளர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவடைந்த நிலையில், இன்று காலை முதல் வழமைபோல் புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று காலை பல அலுவலக புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் பொது முகாமையாளர் தெரிவித்தார்.
மாளிகாவத்தை புகையிரத சாலையில் பணிபுரியும் பிரதி கட்டுப்பாட்டாளர் ஒருவரை ஊழியர் ஒருவர் தாக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, புகையிரத கட்டுப்பாளர்கள் சங்கத்தினர் கடந்த தினங்களில் சுகயீன விடுமுறையை அறிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இதனால் நேற்றைய தினத்தில் 41க்கும் மேற்பட்ட புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டன. இவ்வாறானதொரு பின்னணியிலேயே பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த தொழிற்சங்கங்கள் நேற்று பிற்பகல் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர். அதன்பின்னர் ஏற்பட்ட இணக்கப்பாட்டையடுத்து பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.